நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
நாமல் ராஜபக்ச, பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றம் செய்திருப்பதால், அவர் மற்றும் ஏனைய 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கிடைத்துள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில், நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் இரண்டாது குற்றவாளியான இந்திக பிரபாத் கருணாதீர என்பவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இவரை கைது செய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like this video