நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

371
நாள் முழுவதும் உற்சாக மனநிலையோடு இயங்கவேண்டுமெனில் அதற்கு உணவுகளும் அவசியம்.ஆகவே ஆரோக்கிய உணவுகளே எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிடுங்கள்.

சிவப்பரிசி

சிவப்பரிசியில் உள்ள ரைபோஃபிளேவின் என்ற விட்டமின் ‘பி’, மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது.

நம் உடலில் போதுமான அளவு ‘பி’ வைட்டமின் இருக்கும் போதுதான் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், நியூரோடிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ ஆக மாற்றப்படுகிறது.

இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தருவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும்.

மீன்

புரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக இருக்கும் போது, மூளையின் செல்கள் டோபமைன் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கின்றன.

நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.

மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஆக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். இதற்கு காரணம் அதில் உள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்னும் அமினோ அமிலங்கள் மற்றும் செரட்டோனின், டோபமைன் போன்றவை. கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.

இது தவிர, விட்டமின் ‘சி’ மிகுதியாக இருப்பதால், அது, மூளைக்கு தேவையான ‘நார்எபிநெப்ரின்’ தயாரிக்க உதவுகிறது.

மூளையின் ரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் உள்ளது. இது அசிடைல்கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்க தேவைப்படுகிறது. அசிடைல்கோலின், மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.

வல்லாரைக்கீரை

வல்லாரையிலுள்ள ப்ரம்மிக் அமிலம், ப்ரமினோசைட் மற்றும் ப்ரம்மோசைட் போன்றவையே நினைவாற்றலுக்கு உதவுபவை. வல்லாரையில் டி.ஹச்.ஏ. இருப்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. மகத்துவம் வாய்ந்த வல்லாரையை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.

எள்

மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது.எள்ளில் துத்தநாகம் (Zinc) உள்ளது. இது ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்.

துத்தநாகம், மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும். எள்ளில் அரிசியில் உள்ளது போல் ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலம் உள்ளது. இதுவே மூளையின் முக்கிய நியூரோ டிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ ஆக மாற்றப்படுகிறது.

SHARE