தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கை யுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எந்த அறிக்கையும் வரலாம்; போகலாம். எந்தப் பேச்சுகளும் நடைபெறலாம். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது.
ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச ரீதியிலான தாக்கத்தை ஈடுகட்டும் வகையில் அரசின் போக்குகள் அமைந்துள்ளதால், இது விடயத்தில் தமிழர் தரப்பில் பெரும் அதிருப்தியான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து உதயன் பத்திரிகைக்கு கருத்து வழங்குகையில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கேள்வி : தமிழ்க் கூட்டமைப்புடன் அரசு பேச்சை ஆரம்பித்துள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளிவரவிருக்கின்றது. இதனால் ஏதேனும் சுமுகமான தீர்வு காணப்படலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில்: இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அதனை எந்தவிதத்திலும் ஆட்டங்காண வைக்க இடமளிக்கக்கூடாது. ஆனால், அக்கட்சி மிக்க நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடும்.
நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் அக்கட்சி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது. சென்ற 60 வருடங்களாக பெரும்பான்மை இன அரசியல்கட்சிகள், “அதைத் தருகின்றோம். இதைத் தருகின்றோம் என்று கூறிவிட்டு எதையுமே முறைப்படி சட்டரீதியாகக் கொடுக்கவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் கூட அமுல்படுத்தப்படவில்லை.
பண்டாரநாயக்கா செல்வநாயகம் உடன்பாடு கிழித்தெறியப்பட்டது. டட்லி சேனநாயக்கா செல்வநாயம் உடன்பாடு கைவிடப்பட்டது. சட்டவலுவுள்ள பிரதேச சபைகள் உருவாக்கித் தரப்படும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறிவிட்டுப் பின்னர் அதிலிருந்தும் அவர் நழுவிக்கொண்டார். ஆகவே, கண்ட மிச்சம் தமிழ்பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவுமே அரசியல் ரீதியாக வழங்கப்படாததுதான்.
ஆயுதமேந்திய பிரபாகரன் காலத்தில் பிரபாகரன் மிஞ்சியமையால் அரசுகள் கெஞ்சின. இன்று நாங்கள் கெஞ்சி அரசு மிஞ்ச இடமளிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. எமது கோரிக்கைகள் தார்மீக அடிப்படையிலானது, சட்டரீதியானவை, சர்வதேச சமூகம் ஏற்கும் தன்மையுடையன.
ஆகவே, எமது அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் பற்றுறுதியுடன் இருக்கவேண்டும். ஆனால், அதேநேரத்தில் நிதானத்துடன் செயற்படவேண்டும். “எதையாவது தாருங்கள் அதையே ஏற்றுக்கொள்வோம்” என்று நாங்கள் நினைத்தால் எம்மவர் இத்தனை பேர் சித்திரவதைப்பட்டதற்கும், உயிர்களைத் தியாகம் பண்ணியதற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அதுமட்டுமல்ல, ரயில் பாதைகள் அமைத்துத் தந்துள்ளோம், துறைமுகம் நிர்மாணித்துத் தருவோம், புதிய பாதைகள் அமைப்போம் என்று கூறி எமக்கு ஏதோ சலுகைகள் தருவதுபோல் அரசுகள் பேசினால் அதில் அர்த்தமில்லை.
இவை யாவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருகாலத்தில் நடைமுறையில் இருந்து அவற்றைச் செப்பனிடாது அரசுகள் செயல்பட்டதினால்தான் போக்குவரத்து வசதியின்மையை எமது மக்கள் இதுவரை சந்தித்து வந்துள்ளார்கள். எமக்கு வழங்கவேண்டியவற்றை வழங்காதிருந்துவிட்டு, இப்பொழுது வழங்குகின்றோம். நாங்கள் உங்கள் மீது கரிசனை கொண்டுதான் இவ்வாறு செய்கின்றோம் என்றால் அது நகைப்புக்கு இடமானது.
அடிப்படைக் கொள்கைகள் என்று கூறும்போது பாரம்பரியமாகத் தமிழ் பேசிவந்த மக்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும். அதனுள் முஸ்லிம்களுக்கு ஒரு அலகை ஏற்படுத்துவது தமிழ் மக்களும், முஸ்லிம்களும் கிழக்கிலுள்ள மக்களும் சேர்ந்து தமக்குள் எடுக்கவேண்டிய ஒரு தீர்மானம். அதில் மத்திய அரசு தலையீடு செய்யவேண்டிய அவசியமில்லை.
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் சேர்ந்து தம்மைத் தாமே ஆள்வதற்கு வழிவகுப்பதுதான் மத்திய அரசின் கடமை. பெரும்பான்மையினரான தமது மொழி, மதம், கலாசாரம் என்பவற்றை சிறுபான்மையினரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பது சர்வதேச நியமங்களுக்கு முரணான ஒரு எதிர்பார்ப்பு.
வடக்கு, கிழக்கை இணைப்பதால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப்பேசும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஏன் பௌத்த மக்களின் தனித்துவம் கூடப் பாதுகாக்கப்படும். இந்தியாவில் சமஷ்டி முறையைப் பின்பற்றியதால் அந்நாடு எத்தனையோ விதமான மொழியுடைய மக்கள் கூட்டங்களை வைத்துக்கொண்டும் இன்றுவரையில் பிரிந்துவிடவில்லை.
இலங்கையிலும் சமஷ்டி முறை அனுசரிக்கப்பட்டால் நாடு பிரிந்துவிடாது, ஒற்றுமைக்குத்தான் அது வழிகோலும். தற்போதைய சூழலில் சமஷ்டி ஒன்றே எமக்கு விடிவைத் தரவல்லது. சமஷ்டியே எமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தவல்லது. இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் அரசுடனான பேச்சு நடைபெறவேண்டும்.
இந்திய அரசமைப்பைப் போன்று சமஷ்டி என்று கூறாமலே சமஷ்டியின் கீழ் பெறக்கூடிய நல உரித்துகளை நாம் பெற இடமளிக்கலாம். சமஷ்டி என்ற பதத்தைப் பாவிக்காமலேயே மாகாணசபைகளுக்குரிய அதி உச்ச அதிகாரங்களை வழங்கலாம். வடக்கு, கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும் வலியுறுத்தலாம்.
சில அரசியல் கருத்துகள் சிங்கள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் எங்கள் பாரம்பரிய உரிமைகளையும், தனித்துவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. சமஷ்டி என்ற பதத்திற்கு பிழையான அர்த்தம் கற்பித்தவர்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளே. இப்பொழுது அதனுடைய உண்மையான அர்த்தத்தை மக்கள் விளங்கிக்கொள்ள சிங்கள அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எந்த அறிக்கையும் வரலாம், போகலாம் எந்தப் பேச்சும் நடைபெறலாம். ஆனால், எங்கள் அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.