நிரந்தர நியமனம் வழங்ககோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

317

நிரந்தர அரச நியமனங்களில் உள்வாங்க கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினர்.

மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா அருகில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்படாதவர்கள் மற்றும் இதுவரையில் நியமனம் வழங்கப்படாதவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

“வறுமையில் வாடுகின்றோம் தயவுசெய்து அரச தொழில் கிடைக்க குரல் கொடுங்கள்”, ”பொதுநிர்வாக அமைச்சரே ஏன் இந்த மௌனம், மிக விரைவில் நியமனம் வேண்டும்”;,எங்களுக்கு தற்போது வேண்டியது பட்டதாரி நியமனம் ஒன்றே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனங்களை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.

தமது பட்டங்களை நிறைவுசெய்த பலர் தொழில்பெறும் வயதை கடந்த நிலையில் சென்றுகொண்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாத நிலையே இருந்துவருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

தற்போது நிலவும் நல்லாட்சியில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர்,பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

SHARE