நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, அந்த அதிகாரத்தை நாடாளுமன்றம், நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பத்திரத்தையும், தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும் பத்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க உள்ளிட்ட ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க குரல்கொடுத்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் பூதவுடல் மீது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரி சபதமிட்டிருந்தார். இதற்கமைய நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையே நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி வெளியிட்டார். அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால, “ஜனவரி மாதம் மக்கள் வழங்கிய ஆசீர்வாதம் மூலம் அமைக்கப்பட்ட இந்த அரசு, இனிவரும் காலங்களிலும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களின்போது நாம் கூறிய வாக்குறுதிகளுக்கு அமைய 19ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கமைய எமது அடுத்தகட்ட இலக்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றமும், தேர்தல் முறைமையில் மாற்றமும் கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சைத் தொடர்ந்து நாளை (இன்று) கூடவுள்ள அமைச்சரவைக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கும் பத்திரத்தையும், தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும் பத்திரத்தையும் நான் கொண்டுவரவுள்ளேன். இதன்மூலம் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரங்களை நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்குவதும் எமது நோக்கமாகும். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழக்கூடிய சிறந்ததொரு நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவேண்டும்” – என்றார். இதேவேளை, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால கருத்து வெளியிடும்போது, “எமது நாடானது வேகமாக வளர்ச்சியடையும் நாடாக தற்போது மாற்றமடைந்துவருகின்றது. இதற்கு வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளின் ஒத்துழைப்பும் பெரும் பாங்காற்றுகின்றது. இப்படியானவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை கொடுப்பதன் மூலம் எமது இந்தப் புதிய பயணத்தை மேலும் வலுவடையச் செய்யமுடியும் என்பதே எமது நிலைப்பாகும். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை இரட்டைப் பிரஜாவுரிமை என்பது சிறப்பான ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. அதாவது, இம்முறைமை மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இலகுவான தொடர்பு, வர்த்தகப் பொருளாதாரக் கொள்கைகளை பலப்படுத்துவது, தொலைத்தொடர்புகளை அதிகரிப்பது எனப் பல செயற்பாடுகளைப் பேணமுடியும். எனினும், கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இரட்டைப் பிரஜாவுரிமைக் கொடுப்பதில் சில சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. ஆனால், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள இந்தச் சமாதான நாட்டில் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதுடன், மக்களுக்கான புதிய அரசொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுதந்திரத்தை மக்கள் பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே எமது அரசால் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாடு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எமது செயற்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்றுமதி வர்த்தகம், பொருளாதார முன்னேற்றம் என்பன சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளும் தமது இரட்டைப் பிரஜாவுரிமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இதற்கு அரசு எனும் ரீதியில் எமது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்”