இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்மக்களுக்கான நிலையான நிரந்தரமான தீர்வை விரும்பாதவர்களே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவீல் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு முழக்கமிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பல நூற்றாண்டுகாலமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருந்திருந்தன. கி.பி.505இல் நல்லூரிலே இராசதானியொன்று இருந்திருக்கிறது ஆனால் தொடர்ந்து மாறிமாறிவந்த சிங்கள அரசுகள் அவற்றை திட்டமிட்டு அழித்து வந்துள்ளன.
இன்று வடக்கு கிழக்கு இணைந்து எமக்கான தீர்வு கனிந்துவரும் நிலையில் எமது சகோதர இஸ்லாமியர்கள் சிலர் அதனை எதிர்க்கப்புறப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கான தீர்வையும் தவிடுபொடியாக்கும் என்பதனை அவர்கள் உணரவேண்டும்.
அம்பாறை மாவட்டம் இன்று இக்கட்டான சூழ்நிலையிலுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரொபினுக்கெதிராக போர்க்கொடி தூக்குகின்றனர்.
இத்தனைக்கும் அவர் தமிழ்மக்களது குரலாக இருந்தது மாத்திரமே அவர்செய்த கைங்கரியமாகும். நாங்கள் மாத்திரம் சமத்துவமாக சகோதரராக அனைத்தையும் பங்கீடு செய்யவேண்டும். ஆனால் அவர்கள் தங்களது பகுதிகளை மாத்திரமே அபிவிருத்திசெய்வார்கள்.
கிழக்குமாகாணசபையின் சமத்துவமான அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் கடந்தகாலங்களில் அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ்க்கிராமமும் எடுபடவில்லை. இந்தமுறையே திருக்கோவில் வளத்தாப்பிட்டி எடுபட்டுள்ளன. இப்படி பாரபட்சம்
காட்டுவார்கள்.இதுபற்றி ஏனையவர்களுக்குச் சொன்னாலும் புரிவதில்லை.
வடக்கு கிழக்கிலே 8 மாவட்டங்களுள்ளன. அவற்றிலே இரு இனங்களுக்கிடையே சிக்கி பலகோணங்களிலும் புறக்கணிக்கப்பட்டுவருகின்ற ஒரு சமுதாயமாக அம்பாறை தமிழ்ச்சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களில் அம்பாறைமாவட்ட தமிழர்கள் சொல்லமுடியாத துன்பதுயரங்களுக்கு இலக்காகிவந்துள்ளனர்.பல அழிவுகளைச்சந்தித்துள்ளனர். பலகோடிருபா சொத்துக்களை இழந்துள்ளனர் எனக்கூறினார்.
மேலும், இதன்போது தமிழரது பாரம்பரியங்கள் பண்பாடுகள் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்ற தமிழ் ஊர் என்றால் அது காரைதீவையே சாரும்.அதற்கு இங்குள்ள கல்விமான்கள் புத்திஜீவிகள் திறமைசாலிகளே காரணம். அந்த ஒற்றுமையால் அவர்கள் சாதிக்கின்றார்கள். அதற்காக காரைதீவிற்கு தலைவணங்குகின்றேன் எனக்கூறியமை குறிப்பிடத்தக்கது.