
கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து மகிந்த ராஜபக்க்ஷ விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறு மாத்திரமே தான் ஆலோசனை வழங்கியதாக மகிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் நகர நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தன்னை அதில் இருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு அறிவித்துள்ளார்.
நிழல் அமைச்சரவை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் வரை தான் அது பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் அது பற்றி தனக்கு எவரும் அறிவிக்கவில்லை எனவும் எதுவும் தெரியாது என்பதால், தன்னை அதில் இருந்து நீக்குமாறும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரையே நிழல் அமைச்சரவையின் அடுத்த பிரதமர் என கருதுவதே நாடாளுமன்ற சம்பிரதாயமாகும். எனினும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்க்ஷவை நிழல் பிரதமராக நியமித்துள்ளனர்.
இதனை அறிந்தே மகிந்த ராஜபக்க்ஷ நிழல் அமைச்சரவையின் பொறுப்புகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிழல் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகினார்
கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் பிரதமர் பதவியில் இருந்து குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச விலகியுள்ளார்.
இந்த செய்தியை அரசாங்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான அறிவித்தலின்படி மஹிந்த நிழல் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் பௌத்த சாசன நிழல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்எனினும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையே தாம் நியமிக்குமாறு கோரியதாகவும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு தெரியாது என்ற அடிப்படையிலேயே மஹிந்தவின் விலகல் இடம்பெற்றுள்ளது.