தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற இன்றைய மலையக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சுகபோக வாழ்க்கையில் கவனமாக இருக்கின்றார்களே தவிர மக்களை பற்றி சிந்திப்பதில்லை என முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்தகால அரசாங்கத்தில் ஆட்சியின் போது தற்போது ஏற்பட்ட அனர்த்தங்களைவிட மிக மோசமான அனர்த்தங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டன.அப்போது இருந்த அரசாங்கத்தில் அனர்த்தங்களுக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது அதனை மக்களுக்காகவும் அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் பயன்படுத்தினார்கள். அப்போது அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் இந்நிலைமைகளின்போது மக்களுடன் மக்களாக இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மக்களின் அவல நிலைகளை அறிந்து தனது அமைச்சின் மூலம் மக்களுக்கு தேவையான உலருணவு பொருட்களை வழங்கி வைத்தார்.தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,பலர் இருந்தாலும் அனர்த்த இடங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதில்லை.அத்தோடு அவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. தற்போது உள்ள அரசாங்கத்தில் மக்களின் பலதேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவற்றை சரியான முறையில் மக்களுக்கு பயன்படுத்த தவறுகின்றனர். மேலும் கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இவ்வாறான அனர்த்தங்களின்போது உடனடியாக மக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் உடனடியாக வழங்கி வைக்கப்பட்டது. அன்று இடர் முகாமைத்துவ அமைச்சினூடாக உலருணவு பொருட்கள் மட்டுமல்லாது பல்வேறுபட்ட இயந்திரங்கள் கூட மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான சூழல் இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்றார்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்