நீங்கள் அறிந்ததுண்டா இவர்களின் வாழ்க்கையை? 

172

தங்கள் பழைய பண்பாடு குலையாமல் வாழும் சமூகங்களில் பாசி மணி விற்கும் பழங்குடி சமூகமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருந்த இம்மக்கள் இப்போது சில பகுதிகளில் வீடுகள் கட்டி சேர்ந்து வாழ்கிறார்கள்.

இன்னும் ஆதித்தன்மை மாறாமல் வாழும் இந்த சமூகத்தை அண்மையில் தான் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க இசைந்திருக்கிறது மத்திய அரசு. தெருவோரங்களில் வாழ்பவர்களாக, ஊசி, மணி, பாசி விற்பவர்களாக நாம் கடந்துபோகும் பாசி மணி விற்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானது.

கடும் கட்டுப்பாடுகள், ஒழுக்கமான வாழ்க்கைமுறை கொண்ட இவர்களின் திருமண முறை மிகவும் சுவாரஸ்யமானது. தண்ணீராக ஓடும் மது, வேடிக்கையான விளையாட்டுக்கள், சண்டைகள், சச்சரவுகள், பஞ்சாயத்துகள் என ஏகப்பட்ட களேபரங்களோடு தான் இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

பாசி மணி விற்கும் பழங்குடி சமூகத்தின் பூர்வீகம் வட இந்தியா. சிவாஜியின் படைப்பிரிவில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். முகமதியர் படையெடுப்பில் சிவாஜிக்கு பின்னடைவு ஏற்பட்ட பிறகு, படைவீரர்களாக இருந்த இவர்கள் அடிமைகளாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தாங்கள் அணிந்திருந்த உடைகள் அடிமைகளாக அடையாளம் காட்டவே, அவற்றை களைந்துவிட்டு இலை, தழைகளை உடுத்திக் கொண்டனர். உணவுக்காக பறவைகளையும், மிருகங்களையும் வேட்டையாடினர்.

இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷார் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோது, காடுகளில் வாழ்ந்த இம்மக்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள். இவர்களின் வேட்டையாடும் திறனைக் கண்டு வியந்த பிரிட்டிஷ் துரைமார்கள், இவர்களுக்கு துப்பாக்கி வழங்கி வேட்டையாடிப் பிழைக்க வழியும் செய்து தந்தார்கள். இந்தியா முழுவதும் இவர்களின் சந்ததியினர் வசிக்கிறார்கள். இவர்களது, மொழி வாக்ரி போலி. இதற்கு எழுத்து வடிவம் இல்லை.

பாசி மணி விற்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுக்கோப்பானது. குறிப்பாக பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதேநேரம், பிற சமூகங்களை விட பெண்களுக்கு அதிக மரியாதையும் உண்டு.

குறிப்பாக, வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், விழா எடுத்து கொண்டாடுவார்கள். காரணம், பரிசப்பணம். பெண் திருமணத்தின் போது, தன் குடும்பத்துக்கு பெரும்தொகையை ஈட்டித் தருகிறாள்.

இந்த சமூகத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தான் வரதட்சணை தர வேண்டும். தவிர, பெண் வீட்டுக்காரர்கள், உறவுக்காரர்கள் அனைவருக்கும் உடைகள் வாங்கித் தரவேண்டும். திருமணச் செலவும் பையன் வீட்டாரே செய்ய வேண்டும்.

அதற்கு தகுதிபடைத்த ஆணுக்கு மட்டுமே பெண் கிடைக்கும். இன்னொரு முக்கியத் தகுதி, மாப்பிள்ளைக்கு சாமி சொத்து இருக்க வேண்டும். சாமி சொத்து என்பது, மூதாதைகள் கொடுத்துவிட்டுப் போன வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள்.

இச்சமூகத்தில் இரண்டு வகை உண்டு. எருமை வெட்டுபவர்கள், ஆடு வெட்டுபவர்கள். எருமை வெட்டுபவர்கள், ஆடு வெட்டுபவர்கள் வீட்டில் மட்டுமே பெண் எடுக்க வேண்டும். ஒரே பிரிவில் எடுத்தால் அண்ணன் தங்கை முறை வந்து விடும். பெரும்பாலும் பெண்களுக்கு 14 வயதுக்குள் திருமணமாகி விடும். ஆணுக்கு, அதிகப்பட்சம் 18 வயது. பெரும்பாலும் பெரியோர் நிச்சயிக்கும் திருமணம் தான்.

இப்போது ஆங்காங்கே சில காதல் திருமணங்கள் நடக்கின்றன. சரியான உறவுமுறைக்குள் காதலித்து திருமணம் செய்பவர்களை, பஞ்சாயத்தில் நிறுத்தி, மாப்பிள்ளையிடம் இருந்து பெண் வீட்டாருக்கு பரிசப்பணத்தை வசூல் செய்து கொடுத்து விட்டு சேர்த்துக் கொள்வார்கள். முறைதவறிய உறவாக இருந்தால் விலக்கு செய்து விடுவார்கள். விலக்கு செய்யப்பட்டவர்கள் எந்த ஊரிலும் சேர்ந்து வாழ முடியாது.

குழந்தைகள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயித்துவிடும் வழக்கம் இவர்களிடம் இருந்தது. பெண்ணுக்கு மூன்று வயதான உடனே, திருமணத்தை முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடக்கும் இதுபோன்ற திருமணங்கள் இப்போது குறைந்து விட்டன. திருமணத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் ஏகப்பட்ட மரியாதை செய்ய வேண்டும்.

பெண் பார்க்கப்போகும் போது, தாம்பூலம் இருக்கிறதோ இல்லையோ, மது அவசியம். பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பே எல்லோரும் மது அருந்தி கொண்டாடி விடுவார்கள். பேச்சுவார்த்தை முடிந்தபிறகு, பஞ்சாயத்தார் முன்னிலையில் பரிசம் போடுவார்கள். ஒரு காலத்தில், பரிசப்பணம், 250 ரூபாயாக இருந்தது.

இன்று, 25 ஆயிரத்துக்கு மேல் ஏறிவிட்டது என்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் பரிசப்பணம் வாங்கும் பெண் வீட்டார், அதை சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தைக்கெல்லாம் பிரித்துக் கொடுப்பார்கள். திருமணம் மாப்பிள்ளை வீட்டில் தான் நடக்கும். ஒருகாலத்தில் திருமண சடங்குகள் மட்டும் 15 நாட்களுக்கு நடக்கும். இப்போது. 3 நாட்களாக சுருங்கி விட்டது.

பெண் வீட்டுக்காரர்கள் உறவுகளோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து விடுவார்கள். எல்லோரும் மது அருந்துவார்கள். முதல் நாள் இரவு, பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கையில் காப்பு கட்டுவார்கள். மாப்பிள்ளை பெண் கழுத்தில் கருகமணி கட்டுவார். விருந்து களைகட்டும். விளையாட்டு, சண்டை, பாட்டு என்று திருமண வீடு களைகட்டும்.

மூன்றாம் நாள் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் விளையாட்டுகள் நடக்கும். இந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும். அதோடு திருமண நிகழ்வு முடிந்தது. திருமணம் முடிந்ததும், மூன்று நாட்கள் மாப்பிள்ளையின் வேட்டியை மணமகள் தலையில முக்காடு போல சுற்றிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் கெட்ட ஆவிகள் பெண்ணை சூழ்ந்து கொள்ளாமல் தடுக்கவே இந்த சடங்கு. திருமணத்துக்குப் பிறகு ஒருவருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன்பிறகு தனிக்குடித்தனம் போகலாம். அல்லது மாப்பிள்ளை வீட்டில் இருக்கலாம்.

திருமணம் முடித்த பெண்கள் மெட்டியணியக் கூடாது. செருப்பு அணியக்கூடாது. பூ வைத்துக் கொள்ளக்கூடாது. திருமணத்துக்குப் பிறகு, ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒத்துப்போகாத நிலையில் வெகு எளிதாக அந்த பந்தத்தில் இருந்து வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒன்று சேர்க்க முயற்சிக்கும்.

முடியாத பட்சத்தில் எளிய தீர்வு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக்கோலை எடுத்து மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடவேண்டும். அப்போதும் மதுவிருந்து வைக்க வேண்டும். பிறகு இருவருமே புதுவாழ்க்கையை தொடங்கலாம்.lifelife01life02life03

SHARE