நீடிக்கும் அகழ்வு – நிலை நாட்டப்படுமா நீதி!

109
(மன்னார் நிருபர்)
கடந்த மூன்றாம் மாதம் 27 திகதி மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து மண்ணில் உள்ள எலும்புகள் சம்பந்தப்பட்ட அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
  
குறித்த அகழ்வு பணிகள் தொடர்ந்த போது மேலும் சந்தேகத்தையும் கேள்விகளையும் தோற்றுவிக்ககூடிய வகையில் மேற்படி வீட்டில் கொட்டப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள், பற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அனைத்தும்  குறித்த மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தின் பக்கம் திருப்பியது.
இதனை தொடர்ந்து ஒட்டு மொத்தமான சமூகத்தினுடைய பார்வை உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தின் பக்கம் திரும்பியது. குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் உள்ள பல பகுதிகளுக்கு  விற்பனை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவ் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றது.
இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட மண்ணை கொள்வனவு செய்த மக்களையும், சதொச வளாகத்தில் இருந்து மண்ணை ஏற்றி விநியோகித்த வாகன சாரதிகளையும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா தொரிவித்திருந்தார்.
இவ் செயற்பாடுகளை தொடர்ந்து ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்திலும் குறித்த வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட மேலதிக  மண்னை பராமரித்து வைத்திருந்த  மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதி பிரதேசத்திலும் உள்ள மண் ஆகியவற்றை ஒரே நேரத்தில்  அகழ்வு செய்யும் பணிகள் ஆரம்பமானது.
அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தம் வகையில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதி பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. குறித்த அகழ்வு பணிகள் ஓருபுறம் இடம்பெற்று கொண்டிருந்த சமயத்தில் குறித்த வளாக பகுதியானது ஓரு மயானம் என  கதை ஒன்று ஆதாரங்கள் இன்றி பரவ விடப்பட்டிருந்தது.
ஆனாலும் அகழ்வு பணிகளில் புலப்பட்ட மனித எச்சங்கள் சந்தேகத்தை வேறு திசைக்கு கொண்டு சென்றது.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அகழ்வு பணிகளில் புலப்படும் மனித எச்சங்கள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தனர்.
இதனால் குறித்த அகழ்வு பணியானது அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மன்னார் நீதவான் முன்னிலையில்  மீண்டும் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் W.R.A.S.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நில மட்டத்தில் இருந்து சுமார் 4 தொடக்கம் 6 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள்  கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பொலித்தீன் பையில் அதன் உற்பத்தி திகதி கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒருபுறம் சான்றாக கருதப்பட்ட போது நேற்று 9வது நாள் முடிவில் அருகருகே நான்குக்கு மேற்பட்ட மண்டையோடுகள் அகழ்தெடுக்கப்பட்டன. புரியாத பல மர்மங்களை கட்டவீழ்த்து செல்கின்றது மன்னார் புதைகுழி.
இன்றும் 12வது நாளாகவும் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கேள்வியும் ஒன்றுதான் தொடர்ச்சியாக அகழ்ந்து எடுக்கப்படுகின்ற மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் உரிய விதமாக இடம் பெற்று உரிய காலத்தில் நீதி நிலை நாட்டப்படுமா? அல்லது எற்கனவே தோண்டப்பட்டு  எந்த ஒரு முடிவும் இல்லாமல் தீர்ப்புக்காய் காத்திருக்கும் மாந்தை மனித புதை குழி போன்று இந்த மன்னார் புதைகுழி மர்மமும் காத்திருக்க வைக்குமா ?
SHARE