மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டியில் அமைக்கப்பட்டவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற சீ.யோகேஸ்வரனினால் இன்றைய தினம் அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.
சித்தாண்டி இளம் சைவ மாணவ மன்றத்தின் தலைவர் விஸ்வநாதன் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சித்தாண்டி பிரதேசமானது நிலப்பரப்பில் பரந்ததும், ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட பெரும் தொகையான குடித்தொகையை கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும்.
கலைகலாசார விழுமியங்கள் மற்றும் கிழக்கிலங்கையில் வராலாற்று சிறப்புப் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுத பேராலயம் அமைந்துள்ள கிராமமாக அமையப்பெற்றுள்ளது.
குறித்த பிரதேச பொது மக்களின் கலைகலாசார மற்றும் திருமணங்களை நடத்தக்கூடிதொரு கலாசார மண்டபம் இல்லாத பெரும் குறைபாடாக கடந்த காலங்களில் காணப்பட்டபோதும் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செங்கலடி தொடக்கம் வாழைச்சேனை வரையான பல பகுதிகளை உள்ளடக்கிய இந்துக்கள் அதிகமாக வாழுகின்ற பிரிவுகளில் அவர்களின் கலைகலாசார நிகழ்வுகளை நடாத்துவதற்கு கலாசார மண்டபம் இல்லாதது பெரும் குறைப்பாடாக காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் சித்தாண்டி இளம் சைவ மாணவ மன்றம் மற்றும் பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வரவு செலவுத்திட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோஸ்வரன் ஆரம்பக் கட்ட தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், ஏனைய நிதித் தொகையினை தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதும் வசதிகளுடன் அமையப் பெறவுள்ள குறித்த கலாசார மண்டபம் கட்டி முடிப்பதற்குரிய பணத்தேவை மிகவும் பெரும் குறைபாடாக இருக்கின்ற நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளையும் நாடி நிற்பதாக சித்தாண்டி இளம் சைவ மாணவ மன்றத் தலைவர் வி.உதயகுமார் தெரிவித்தார்.