நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்-சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜாஜி ஸ்ரீதரன்.

360

 

 

vicki and sampanth 1நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்…..

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கான தீர்;வானது தமிழ்த்தலைமையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த தடவையும் கிட்டாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் ….. சுமந்திரனுக்கு இடையோன உச்ச கட்ட முறுகல் நிலையும் இது விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் காட்டும் தொடர் மௌனமும் இந்த அச்சத்தை அதிகரிக்கின்றன.

ஈழத்தமிழினத்தின் தற்போதைய தலைமையான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்க முற்படுவதன் மூலம் நீண்ட கால அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினமாகலாம் என்று உலக தலைமை நாடான அமெரிக்காவும் பிராந்திய தலைமை நாடான இந்தியாவும் கவலை கொண்டிருப்பதாக இந்தியாவின் நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியே இன்று மிகுந்த கவனம் பெறுகிறது.

Wicki 2_CI

தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டங்களை வகுத்ததை விட தமது அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் தக்கவைப்பதற்கான முனைப்புகளிலேயே மூத்த தலைவர்கள் அதிக கவனம் செலுத்துவதை வேதனையுடன் அவதானிக்கிறோம்.

இன்றைய குழப்பமான சூழ்நிலைக்கு உகந்த பதிலளித்து உடனடித்தீர்வை காண வேண்டிய பொறுப்பு முதல்வர் விக்னேஸ்வரன் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் உள்ளது.

ஈழத்தமிழினத்துக்கு ஒரு கூடுதல் பலமாக அரசியலுக்கு இழுத்துவரப்பட்ட நீதியரசர் விக்னேஸ்வரனின் அண்மைக்கால நகர்வுகள் தமிழினத்தின் அரசியல் திடத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைவதாக பல்வேறு மட்டங்களில் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது கூட்டமைப்பின் முரண்பாடுகள் அனைத்துலக முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இவ்வாறான திறந்த மடலை எழுத வேண்டும் என்ற தேவை எழுந்திருக்கிறது.

முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களே தமிழினத்தின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தங்களது நகர்வுகளினால் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் இழுபறிகளுக்கு காரணமாகாது தவிர்த்துக் கொள்ளும் பொறுப்பும் முதலில் உங்களுடையதாகிறது.

ஏனெனில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் உங்களுக்கும் இடையோன இடைவெளியை முதன்முதலில் காண்பித்தது தாங்களே…

தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் வேளையில் தமிழ் தலைமையை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் இந்திய அரசும் அமெரிக்காவும் தங்களிடம் நேரடியாக கோரிக்கை முன்வைக்குமளவுக்கு உட்தரப்பு விடயங்களை தாங்கள் உலக மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவிடமும் உலக வல்லரசான நாடான அமெரிக்காவுடனும் பேச்சு நடத்த வேண்டிய பொறுப்பான பதவியி;ல் உள்ள தங்களிடம் உங்கள் மக்களின் உரிமைக்காக பொறுப்புடன் செயற்படுங்கள் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு தாங்கள் தாழ்ந்து சென்றிருப்பதை உணருகிறீர்களா?

இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணமான தங்களுக்கு தமிழினத்தை தலைமை தாங்கும் தகுதி உள்ளதென்று மானசீகமாக கருதுகிறீர்களா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு பதில் கடிதம் என்ற அறிக்கையை வெளியிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு உங்களால் கட்டுப்பட முடியாது என்று கூறி அதற்கு பல்வேறு காரணங்களை காண்பித்திருந்த தங்களால் இன்று எவ்வாறு கூட்டமைப்பின் உள் நெருக்கடியை பேசித்தீர்க்க முடியும் என்று இந்திய அமெரிக்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி வழங்க முடிந்து என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்துவீர்களா?

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் எவராலும் எதிர்வு கூற முடியாத நிலையில் இருந்த போது ஒரேயொரு நம்பிக்கை ஓளியாக தென்பட்டது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னும் அரசியல் தலைமை மட்டுமே. என்பதை தாங்கள் அறிவீர்கள்..

இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த தமிழர் தாயகப்பகுதிகளை போரின் பின்னர் நிர்வாக ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்ததும் வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதை வழிநடத்துவதற்கு தகுந்த தலையாளியை தேட வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருந்ததும் உங்களுக்கு தெரியும்.

ஆற்றல்.. ஆளுமை…… நேர்மை……….. ஆகியவற்றை மட்டுமே மதித்து பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தங்களை நியமித்து அரசியல் வாழ்வுக்கு இழுத்து வந்ததை அனைவரும் அறிவோம்……

முதல்வரே……….

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக பொது வேட்பாளராக உங்களை நிறுத்துவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எவ்வாறான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டது என்பதை தாங்களும் அறீவர்கள்.

கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திடீர் தலைவர் என்று ஒரு சாராhர் ஏளனம் செய்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.

தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானர் தமிழமக்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்குவதற்கு தென்னிலங்கை சக்திகளுக்கு துணை போகக்கூடியவர் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் அறிமுகத்தை மதித்து தங்களுக்கு வெற்றி தந்தார்கள்.

ஆனால் ஏமாற்றம் தரும் வகையில் தாங்கள் தங்களை ஒரு தமிழ்த்தேசிய பிதாவாகவும் ஒப்புவமை இல்லாத தேசியத்தலைவரின் இடத்தை பிரதீயீடு செய்ய எத்தனிப்பது போன்றும் தங்களது அண்மைக்கால நடவடிக்கைகள் அமைகின்றன.

தாங்கள் ஒரு சாதாரண மலினத்தனமான சுயநலம் கொண்ட அரசியல்வாதியாக மாறயிருப்பதையே தங்கள் பேச்சுக்களும் அறிக்கைளும் காண்பிக்கின்றன.

அரசியலுக்கு புதியவராக இருந்த போதிலும் தங்கள் புத்திசாலித்தனம் மேலும் கூர்மையாக்கப்பட்டு புதிய நகர்வுகளை மேற்கொள்ள முற்படுவதையும் சக உறுப்பினரான சுமந்திரனுக்கு பதிலாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையும் தொடர்ந்து நீங்கள் நிகழ்த்தும் உரைகளும் வெளியிடும் கருத்துக்களும் காண்பிக்கின்றன.

உங்களை அரசியலுக்கு இழுத்து வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மட்டுமின்றி உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி எமது நெருக்கடிக்கு தீர்வு காண முன்வரும் பலம் வாய்ந்த நாடுகளையும் ஏமாற்றும் வகையில் உங்களால் சாதுர்யமாக நடந்து கொள்ள முடியும் என்பதையே அண்மையில் உங்களை சந்தித்த இந்திய அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் நிரூபிக்கின்றன.

தங்கள் தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு தடங்களில் நகர்வுகள் மேற்கொண்ட தாங்கள் தமிழ்ததேசியக்கூட்டமைப்புக்கு எதிராக அல்லது மாற்றாக புதியதொரு அணியை ஏற்படுத்தி அதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் தயாராகி உள்ள நிலையில் கட்சியின் உள் முரண்பாடுகள் பேசித்தீர்க்கப்படும் என்று வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வாக்குறுதி வழங்கி இருக்கிறீர்கள்.

இதற்கு அமைவாக தங்களது அடுத்த நகர்வை வெளியிட முடியுமா?.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தங்களைத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் அந்;த அமைப்புக்கு ஆதரவாக இயங்குவதை மறுத்ததோடு கூட்டமைப்பு தலைமை தன்னிச்சையாக இயங்குவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய தாங்கள் அவர்களுடன் இதய சுத்தியாக பேசி கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டை தக்க வைக்க உதவுவீர்கள் என்பதை எவ்வாறு நம்பமுடியும்.

ஏனெனில் அண்மைக்காலமாக தாங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமையை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முதலமைச்சர் பதவியை அடைவதற்காக மட்டுமே கூட்டமைப்பு தலைமையை அனுசரித்து நடந்து கொண்டதாகவே பலர் கருதுகிறார்கள்.

தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தியும் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள் என்றும் தற்போது கூறும் தாங்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலிலும் வட்டுக்கோட்டையிலும் பதவிப்பிரமாணம் செய்திருந்த வேளையில் தாங்கள் அலரிமாளிகையில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டீர்கள்.

வடக்குமாகாணசபையை இயக்க வேண்டிய பொறுப்பு தங்களுடையது என்றும் தென்னிலங்கை தலைமையுடன் நிர்வாக ரீதியாக மோதி வட மாகாண சபை மூலமாக தமிழ் மக்களுக்கு சேவையாற்ற இந்த அணுகுமுறை அவசியம் போலும் என்று நம்பியிருந்த மக்களுக்கு எஞ்சியது வெறும் ஏமாற்றமே..

வட மாகாணசபையை உரிய முறையில் இயக்குவதற்கு தாங்கள் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

வட மாகாண சபை அதிகாரமற்ற மாகாணசபை என்றும் அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பை முழுமையாகத் தரவில்லை என்பதும் தங்கள் தரப்பிலிருந்து வெளிவரும் காரணம்.

அதிகாரமற்ற ஒரு அமைப்பை எதற்காகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தங்கள் பின்னால் தற்போது செயற்படும் கஜேந்திரகுமார் அப்போதே கேட்டிருந்தார்.

எனினும் வட மாகாணசபையின் அதிகாரங்களை மற்றவர்களை விட அதிகம் தெரிந்திருந்த தாங்கள் தங்கள் சாணக்கியத்தாலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்துவதாலும் அரசுக்கு பாரிய சட்ட நிர்வாக நெருக்கடியையும் அழுத்தங்களையும் கொடுத்து அதிகாரங்களை பறித்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடுமே தமிழ் மக்களால் முதல்வராக நியமிக்கப்பட்டீர்கள்.

ஆனால் தங்களது மகத்தான நேரமும் அனுபவமும் ஆற்றலும் தங்களை அரசியலுக்கு இழுத்துவந்த தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சீர்குலைப்பதிலும் அதன் மற்றொரு இளந்தலைவரை அப்புறப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதிலுமே செலவிடப்படுவதை நாம் வேதனையுடன் அவதானிக்கிறோம்.

வடக்கு மாகாணசபையானது ஏற்கனவே கொண்டிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி செய்யவேண்டிய அவசியப்பணிகளைக்கூட தகுந்த முறையில் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வரை தங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

ஒற்றையாட்சிக்குட்பட்ட மாகாண சபையின் அனைத்து சலுகைகளையும் முதல்வராக அனுபவித்து வரும் தாங்கள் அதனை சரிவர நிர்வகிக்காது மக்களை வசப்படுத்தும் வகையில் அதிதீவிர அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பாராக காண்பிப்பதும் முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பதும் கவலைக்குரியது.

வடக்கு மாகாணசபையின் முதல்வராக தங்களை தெரிவு செய்;தால் நீதியரசர் என்ற நாட்டின் உயர் பதவிநிலையை வகித்த பெருமையோடு தென்னிலங்கை தலைவர்களுடன் நெருக்கமான உறவையும் கொண்டிருக்கும் தாங்கள் தங்களது திறமையினால் மத்திய அரசுப்பொறிமுறையோடு மோதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடு;த்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதற்;கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார் என்று எதிர்பார்த்த கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் கைவிட்டுவிட்டு புதிய இலக்கொன்றில் பயணிக்க தலைப்படுகிறீர்கள் என்று கூறுவதில் தவறில்லை என்றே கருதுகிறோம்.

வடக்குக்கு பயணிக்கும் சர்வதேச தலைவர்கள் பிரதிநிதிகள் ஆகியோரோடு சந்திப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளும் தாங்கள் அதனை பயன்படுத்தி மக்களுக்கான உதவிகளை பெறுவதற்கு முயற்சித்ததாக இல்லை.

மாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து விடாதீர்கள் என்று இந்திய அமெரிக்க பிரதிநிதிகள் தங்களிடம் கோரிக்கை முன்வைக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னி மண்ணின் அவலத்தை உணர்ந்து அதற்கான புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஒதுக்கீடுகளை மேற்கொண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தாங்கள் இது விடயத்தில் செயலற்று இருப்பதையே அவதானிக்கிறோம்.

வன்னியின் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக வட மாகாணசபையின் முழு அமைச்சுக்களின் பலத்தையும் பயன்படுத்துவதோடு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதல்வராகிய தாங்கள் அறிக்கை போரை நடத்துவதற்கே முன்னுரிமை வழங்குகிறீர்கள் என்றே கருதமுடிகிறது.

பிரதமர் மோடியுடனான தங்கள் சந்திப்பை தொடர்ந்து , இந்திய அரசு வடக்கில் ஆரம்பிப்பதற்கு முன்மொழிந்த தொழிற்துறைத்திட்டத்துக்கு தங்கள் நிர்வாகம் பதிலளிக்க தவறியதால் அந்த திட்டம் தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டமைக்கு தாங்கள் கூறப்போகும் பதில் தான் என்ன?

தங்களை அரசியலுக்கு இழுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்து புதியதொரு தடத்தில் அல்லது அணியில் பயணிக்க தாங்கள் முடிவு செய்திருப்பதையும் அனைவரும் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் கூட்டமைப்பின் உள் நெருக்கடிகளை பேசித்தீர்க்கலாம் என்று கூறுவது தான் வியப்பூட்டுகிறது.. அவ்வாறு உங்களால் தீர்வுகாண முடிந்தால் உண்மையில் தமிழினம் அதற்காக உங்களுக்கு நிச்சயம் நன்றி பாராட்டும்.

முதல்வர் அவர்களே …………..தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தங்களுக்கு மக்கள் வழங்கிய மகத்தான ஆதரவையும் தங்களுக்கு பதிலான 1,33,000க்கும் அதிகமான வாக்குகளும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வாக்குகள் என்று எண்ணுவதும் கூட்டமைப்பு அல்ல……. தங்களை மக்களே வடமாகாண முதல்வராக தெரிவு செய்ததாகவும் சிறந்த கல்விமானும் தர்க்கவியல் கற்றவருமான தாங்கள் கூறவது சற்று நெருடலாக உள்ளது.

வடமாகாண மக்களே. பெருமளவில் வாக்களித்தவர்கள்……….. அவர்களே உங்களது கட்சி…………… அவர்களின் நன்மையே தங்களது கட்சிக் குறிக்கோள்…………. என்றும் கூட்டமைப்பு பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்……………. என்பது போன்ற வார்த்தைகள் உணர்பூர்வமானவை.

தென்னிந்திய தமிழக அரசியலில் இவ்வாறான வார்த்தை ஜாலங்கள் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான வாக்குகளை வாரி வழங்க உதவலாம்.

ஆனால் எமது மண்ணில் இவ்வாறான பசப்பு வார்த்தைகள் ஒரு போதும் பயன்தராது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனினும் தமிழ்;த்தேசியக்கூட்டமைப்பு தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்று தாங்கள் கூற முற்படுவதையும் அதன் உள் அர்த்தத்தையும் புரிந்து கொண்டுள்ளோம்.

மேற்குறிப்பிட்ட தங்;களது நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் தேர்தலின் போது கட்சிக்கு ஆதரவு வழங்காது தவிர்த்தமைக்கான காரணங்களை ஆராய வேண்டிய அவசியம் சிந்தனைத்திறனும் அரசியல் அனுபவமும் கொண்ட எவருக்கும் ஏற்படாது.

உள் ஜனநாயகமே கட்சியொன்றை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதும் உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சி பிரதிபலிக்க வேண்டும் என்பது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ள வேண்டியது உண்மையோ அது போன்றே ஆளுமைமிக்க தலைமையொன்றின் முடிவோடு உறுப்பினர்கள் உடன்பட முடியாதுவிடின் அதனை தலைமைத்துவத்தின் தான் தோன்றித்தனமான முடிவு என்று விமர்சித்து பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதும் தாங்கள் அறியாததல்ல.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள், அதன் ஜனநாயகத்தன்மை, அதனுடைய அரசியற்கோட்பாடு, அதற்கான நடைமுறைப் பண்பு அல்லது செயல் ஒழுக்கம் போன்றவை பகிரங்கமான விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேளையில் தான் தாங்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வந்தீர்கள்.

கூட்டமைப்பின் தலைமை தான் தோன்றித்தனமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டும் தாங்கள் அதனை தகுந்த முறையில் சரியான வழியில் நடத்திச் செல்லுவதற்கு ஆக்கபூர்வமான திட்டங்கள் எதனையும் முன்வைத்தாக எந்த தகவலும் இல்லை.

கூட்டமைப்பை சரியான திசையில் பயணிக்க வைப்பதற்கு தாங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகவும் நாம் அறியவில்லை.

மாறாக கூட்டமைப்பை முறியடிக்கும் வகையில் மாற்றுத்தலைமையை உருவாக்கும் முயற்சியிலேயே தாங்கள் குறியாக உள்ளீர்கள்.

தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இன்னமும் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாது தலைமையை மதித்து செயற்படுவீர்கள் என்றே நம்புகிறோம்.

இல்லையெனின் தாங்கள் எவருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செய்ற்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தென்னிலங்கை மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்கு துணை போகக்கூடியவர் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை சரியானதே என்றும் நிரூபணமாகிவிடும்..

மறுபுறத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மாற்று அணியொன்றை உருவாக்கி அதற்கு தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராவதற்கு முன்பதாக அவ்வாறானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்துள்ள கட்சிகளோ அல்லது தனிநபர்களோ தங்கள் பின்னால் விசுவாசத்துடனும் நேர்மையுடனும் அணிதிரளுவார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமைப்பாடும் தங்களுக்குண்டு.

இவை தவிர மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களையும் இரகசிய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்களையும் இணைத்துக்கொண்டு அவர்கள் தயவில் தனிவழி தேடுவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானது என்பதை தாங்கள் அறியாதிருக்கிறீர்களா? .

அவ்வாறெனின் தங்களுக்கு சிலவற்றை நினைவூட்டுவது பொருத்தமானது.

இன்று உங்களின் புதிய அணிக்கு பக்க பலமாக இருப்பவரகளில் முதன்மையானவர்கள் என்று கருதப்படும் கஜேந்திஜரகுமார் பொன்னம்பலம் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய அனைவரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் தமிழினத்தின் நலன்களுக்கு எதிராக இயங்குபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்.

இவர்களில் ஒருவரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரன் என்பவரின் துணைவி அனந்தியின் அரசியல் பின்புலம் தொடர்பான சில குறிப்புகளை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். . .

எழிலனின் மனைவியான அனந்தி, கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் அறிவிக்கப்படும் வரை எவராலும் அறியப்படாத புது முகமாகவே இருந்தார்.

எழிலன் என்கிற போராளியின் மனைவியான அனந்தி திடீரென்று தேர்தல் களத்தில் இறக்கப்பட்டார்

விடுதலைப்புலிகளின் அனுதாப வாக்குகளை சுவீகரித்துக் கொள்ளும் கூட்டமைப்பின் நகர்வு அது.

ஆனால் வாக்களிப்பு நெருங்கிய வேளையில் அனந்தியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர், அனந்திக்கு பிரபல்யம் தேடிக்கொடுத்தார்கள்.

ஊடகங்களில் அவரது செய்திகள் முதன்மை வகிக்கவும் எங்கும் அனந்தியின் பெயர் பேசப்பட்டது.

எண்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக அள்ளிக் குவித்து அனந்தி முதன்மை அரசியல்வாதியானார்.

இத்தனை பெரிய வெற்றியை இலங்கை இராணுவமே அவருக்கு தேடிக்கொடுத்தது.

தமிழர் ஒற்றுமையை சிதைக்கும் தென்னிலங்கை தந்திரோபாய நகர்வுகளே அவை என்பதை பின் தொடர்ந்த சம்பவங்கள் துல்லியமாக காட்டுகின்றன.

அனந்தி மீது தாக்குதல் நடாத்தினால் அது அவருக்கு சாதகமாகவே போகும் என்பதை அறிந்திருந்தும் அவரது வெற்றிக்கு அப்போதைய மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவம் துணை புரிந்தது.

அனந்தி வெற்றி பெற்று மாகாண சபைக்கு உறுப்பினரானதும் தனக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த போதிலும் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட தமிழரசுக்கட்சித் தலைமை பின்னர் சுதாகரித்து அவதானமாக நடந்து கொண்டது.

எதிர்பார்த்தது போன்றே கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மதிக்காது செயற்பட்டார்.

சுயமாக ஜெனீவா சென்றார். ஊடகங்களில் சுயமாக அறிக்கைகளை வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அனந்தி கோரிக்கையை முன்வைத்தார்.

தான் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதிலும் அதற்கு எதிராக முடிவெடுத்தது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு பரப்புரைகளை மேற்கொண்டார்.

தமிழ் மக்கள் தேர்தல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் மஹிந்த ராஜபக்சவே பலனடைவார் என்று அனந்தி அறியாமல் இருந்திருக்க முடியாது என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள்.

இன்னும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமானவரும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி நடத்துனருமான ரங்காவின் நிகழ்ச்சியில் தோன்றி கூட்டமைப்புக்கு எதிராக கருத்துகளை கூறியவர் என்பதை விட அவருடைய நிகழ்ச்சி நிரலுக்கு பின்புலமாக உள்ள சக்திகள் பற்றி மேலதிக விளக்கம் அவசியமற்றது.

தங்களுடைய அணிக்கு பக்கபலமாக கருதப்படுபவரும் அனந்தி எழிலனின் செயற்பாடுகளுக்கும் அவருக்கு துணையாக இருப்பவருமான மற்றொருவர் சிவாஜிலிங்கம்.

அதிதீவிர தேசியப் பற்றாளராகவும், விடுதலைப்புலி ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ளும் சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதாலும் இயக்கத்தலைமைக்கு நெருக்கமானவராக பலரால் நோக்கப்பட்டவர்.

போர் முடிவடைந்த பின்னர் கடுமையாக சுகவீனமடைந்த பிரபாகரனின் பெற்றோரின் நலன்களைக் கவனித்த சிவாஜிலிங்கம், அதற்காக அரசாங்கத்துடன், குறிப்பாக அப்போதைய பாதுகாப்பு செயலாளருடன் நெருக்கமாகவே செயற்பட வேண்டியிருந்ததை அனைவரும் அறிவார்கள்.

அதி உச்ச அதிகாரங்கள் கொண்டிருந்த அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் எந்த நேரத்திலும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அவரின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலிருந்தவர் சிவாஜிலிங்கம்.

விடுதலைப்புலிகளுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாகவும் எவ்வாறான கருத்தையும் துணிந்து சொல்லக்கூடிய துணிச்சலானவர் என்று தமிழ்மக்கள் இவர் குறித்து பெருமிதம் கொண்டிருந்தாலும் இந்தத் துணிச்சல் சிவாஜிலிங்கத்துக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை பழுத்த நீதியரசரான தாங்கள் சிந்தித்து பார்க்காதிருப்பது வியப்பை தருகிறது.

(தாங்களும் அதே அணியை சேர்ந்தவர் என்பதால் அதனை அறிந்திருப்பீர்கள் என்று இப்போது உணருகிறோம்)

போர் முடிவடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஸபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்த வேளையில் அதற்கு எதிராக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

சிவாஜிலிங்கம் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு கிடைக்க இருந்த தமிழ் வாக்குகளை தடுத்தார் என்று கூறுவதை விட சிவாஜிலிங்கம் தன்னை எதிர்த்து போட்டியிடுவதை காரணம் காட்டி மஹிந்த ராஜபக்ஸ கூடுதலான வாக்குகளை சிங்கள மக்களிடம் பெறுவதற்கு உதவினார்.

இதே போலவே சிவாஜிலிங்கம் கடந்த பொதுத் தேர்தலிலும் நடந்து கொண்டார்.
மஹிந்தவை எதிர்த்து போட்டியிடுவதாகக் கூறி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இங்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கே சிவாஜிலிங்கம் பயன்பட்டார்.

சிவாஜிலிங்கம் தம்மை எதிர்த்து போட்டியிடுவதை பிரச்சாரம் செய்த மஹிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெற்றுக் கொண்டார்

உங்களுக்கு மிகுந்த பக்கபலமாகவும் பின்புலமாகவும் செயற்படும் மிக முக்கியமான மற்றொருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

மிகவும் தீவிரமான தேசியப் பற்றாளராக தன்னை நிலைநிறுத்த முயன்று வரும் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வலுவான மாற்றுத்தலைமை தானே என்ற மாயையை உருவாக்கி அதற்கான ஆதரவையும் கூட்டமைப்புடன் முரண்படுவோரிடமிருந்து திரட்டி வருகிறார்.

சிவாஜிலிங்கம் போலவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே பலரும் தயங்கிய காலத்திலேயே, விடுதலைப்புலி ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை மெய்சிலிர்க்க வைத்தவர்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒவ்வொரு தடவையும் ஐக்கிய நாடுகள் சபையால் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பதையே பதிவு செய்து கொள்வார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது அனைத்து தமிழ் தரப்பும் அதற்கு ஆதரவளித்த வேளையில் கஜேந்திரகுமார் அதனை எதிர்த்தவர்.

இருந்தும் கடந்த பொதுத் தேர்தலின் போது கஜேந்திரகுமார் அணியினரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக தாங்கள் திரைமறைவில் செயற்பட்டீர்கள்.

தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக முதலில் அறிக்கை விட்டீர்கள் பின்னர் அவர்களின் வெற்றிக்காக ஆதரவாகவும் கூட்டமைப்பின் ஒற்றுமையை மீறியும் அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.

இருந்தும் மக்கள் மிகத் தெளிவாக அவர்களை நிராகரித்தார்கள்.

இன்னொரு வகையில் கூறுவதானால் உங்கள் பரப்புரையை மக்கள் செவிமடுக்கத்தயாராக இல்லை என்ற துல்லியமான செய்தி உங்களுக்கு தரப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலின் போது அனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் போலவே கஜேந்திரகுமாரும் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியையே விரும்பினார் என்று தமிழ் மக்கள் உணர்ந்து அவரை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழினத்துக்கு தலைமை தாங்கும் வேட்கை கொண்டிருக்கும் தாங்கள் இந்த உண்மையை உணராதிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கும் திட்டத்துக்கு உங்களுக்கு மற்றொரு தூணாக செயற்படுபவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

2001ம் ஆண்டு காலப்பகுதியில் எந்த நிபந்தனையும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்;.எல்.எவ் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி புதிய தலைமையை உருவாக்க முற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்.

2001ம் ஆண்டு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருந்தது.

இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் 1989ம் ஆண்டு தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களில் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் 2001ம் ஆண்டு போட்டியிட்ட போது வன்னி மாவட்டத்தில் ; ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு இடத்தை மட்டும் பெற்றுக்கொண்டது.

2004ல் தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் மக்கள் அவரை நிராகரித்த இருந்த போதிலும் தேசியப்பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க தலைமை மறுத்ததை தொடர்ந்து அவர் மாற்று அணி உருவாக்கும் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முற்றாக ஓதுக்கப்பட்டிருக்கும் நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புதிய அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதில் வியப்பேதும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாதவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு வகுக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு தாங்கள் துணை போவது தான் இங்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதுவும் தங்களது நகர்வு ஒரு இனத்தின் நலன்களை பாதிக்கும் பாரதூரமான நடவடிக்கையாக இருப்பதால் இது குறித்து அக்கறை கொள்ளாதோ உங்களிடம் விளக்கம கோராமலோ இருக்க முடியாதுள்ளது. .
;
தென்னிலங்கையுடன் முரண்படுபவர் போல காண்பித்து மேற்குலகத்துடனும் அனுசரித்து போகாது இந்தியாவுடனும் இணைய மறுத்து தான் அங்கம் வகிக்கும் கூட்டமைப்புடன் தலைமையையும் எதிர்த்து மக்கள் நலனுக்காக மட்டுமே செயற்படுபவர் என்ற ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தி தேசியத்தலைவராக மாற முடியும் என்று தாங்கள் தவறாக கணக்கிடுகிறீர்கள் என்று நாம் கருதகிறோம்.

மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் அப்பழுக்கற்ற – இதயசுத்தியான – மக்களுக்கே தன்னை அர்ப்பணிக்க வல்ல ஒரு ஒப்பற்ற தலைவனுக்குரிய இடம் 2009ம் ஆண்டின் பின்னர் தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருப்பதால் அந்த இடத்தை நீங்கள் இலக்கு வைப்பதும் அதற்கு கூட்டமைப்பின் தலைமையோடு முரண்படுவோரும் தமிழரின் தலைமையை தகர்ப்பதற்கு திட்டமிடுவோரும் தங்களுக்கு துணைபோவதையும் நாம் அவதானிக்கிறோம்.

அரசியல் அனுபவமோ பின்புலமோ கிடையாது வெறும் திறமையான நிர்வாகி சிறந்த கல்விமான் என்ற தகுதிகளோடு மட்டும் கூட்டமைப்புக்குள் இழுத்துவரப்பட்ட தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவத்தோடு முரண்படும் அணியினரின் சுயநல அடிப்படையினாலான ஆதரவும் உங்களை அரசியல் செய்யவேண்டும் என்ற ஆபத்திலும் தலைமைத்துவ ஆசைக்குள்ளும் மெதுவாக தள்ளி வீழ்த்தியிருக்கிறது.

இதுபோலவே, மாற்று சக்தி, மாற்றுத் தலைமை என்று பலத்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் களமிறங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழ் மக்கள் மத்தியில் உரிய இடத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வரலாற்றுக் கற்பிதம்.
அண்மைக்கால நிகழ்வுப்பதிவு.

எனவே மக்களின் ஏகோபித்த ஆணையை பிரதிபலிக்கின்ற கூட்டமைப்பின் உறுதியை குலைக்காது முரண்பாடுகளை கட்சிக்குள் பேசித்தீர்த்து வைக்க உறுதிபூணுங்கள்.

தமிழர் நிலைமையை கருத்தில்கொண்டு இந்திய அமெரிக்க பிரதிநிதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எம்மிடம் எஞ்சியிருக்கிறது.

மஹிந்த ராஜாபக்ஸவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அவரது கட்சியில் இருந்தே மைத்திரிபால சிறிசேனா என்பவரை அவருக்கு எதிராக பயன்படுத்தியது போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சீர்குலைப்பதற்கு தங்களை பயன்படுத்த திட்டமிடுவோரிடம் பகடைக்காயாக மாறி விடாது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பாதுகாத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு தங்களுக்கு உண்டு.

இன்னும் மேலாக தன்னிச்சையாக செயற்படுவதாக தாங்கள் குற்றஞ்சாட்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் தனது தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாவிடின் அதனை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும் பழுத்த அனுபவம் கொண்ட இரா சம்பந்தரும் நீதித்துறை அனுபவமும் பன்முக ஆற்றலும் கொண்ட தாங்களும் இளந்தலைவரும் தாங்கள் குறிப்பிடுவது போல தங்களது சட்டக்கல்லூரி மாணவருமான சுமந்திரனும் வெளிப்படையான இதய சுத்தியான பேச்சை முன்னெடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை புதிய உத்வேகத்துடன் பயணிக்க வைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களினது மட்டுமின்றி சர்வதேசத்தினதும் எதிர்பார்ப்பு……

ராஜாஜி ஸ்ரீதரன்

SHARE