நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கோணப்பிட்டியவிலிருந்து நுவரெலியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ்ஸில் மோதுண்ட லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது, தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் இருவரும், லொறியில் பயணித்த மூவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த, கந்தப்பளை பொலிஸார் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.