நுவரெலியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி நேரங்களில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் காணப்படும் பாடசாலைகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.பியதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி நேரங்களில் அனுமதி வழங்கி அம்மாணவர்களையும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். எனவே இப்பிரச்சினை தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் ஊடாக மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து பாடசாலையொன்றின் அதிபரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணைகள் முடிவடைந்து மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் இன்று நேற்றல்ல சுமார் 40 வருடங்களுக்கு மேலாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இறுதி நேரங்களில் வெளிமாவட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கிவந்துள்ளதாக தேடுதலின்போது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள உயர்தர மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்