மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான நேரடி அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு அமைப்பாளர் பதவியை வழங்கியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.
வருகின்ற பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களில் கடந்த காலத்தை விட நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமோக வெற்றியைப்பெறும் எனத் தெரிவித்தார்.
19.08.2016 அதாவது இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பதவிகள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால. சிறிசேன அவர்களினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய பெரியசாமி பிரதீபன் நுவரெலியா அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினருக்கு இவ்வாறான பதவிகளை வழங்கியதில்லை. நுவரெலியா மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் நேரடி கண்கானிப்பில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில் எனக்கு வழங்கப்பட்ட அமைப்பாளர் பதவி கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மலையகப் பிரதேசத்தின் அபிவிருத்தியானது அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் அவ்வாறான வேறுபாடு இல்லாத அபிவிருத்தியை ஜனாதிபதியின் வழிகாட்டலினூடாக முன்னெடுக்கவுள்ளேன் என்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்களைத் தெரிவுசெய்ததில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதன் பிரதியுபகாரமாகவே நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை தமிழருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்