நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் நண்பகல் உணவும் வழங்கி அரவணைக்கும் நிகழ்வு அன்பே சிவம் அமைப்பின் பங்களிப்புடனும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னேற்பாட்டிலும் இம்மாதம் நடைபெற்றது.






இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை முல்லை. தேவிபுரம் முதியோர் சங்க மண்டபத்தில் நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் அன்றைய நண்பகல் உணவும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னேற்பாட்டில் அன்பே சிவம் அமைப்பின் “சூரிச் அருள் மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச்சங்கம் – சுவிஸ்“ உடன் கைகோர்த்த “அருள் மிகு சிறி துர்க்கை அம்மன் ஆலயம் -கிறங்கன் சொலத்தூண் – சுவிஸ்“ இறையன்பர்களின் பங்களிப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவிபுரம் முதியோர் சங்கத்தின் உறுப்பினர் ஐயா செல்வரத்தினம் அவர்கள் தலைமை தாங்கிய இந் நிகழ்வில் முதியோரில் ஓவ்வொரு ஆடவருக்கும் ஒரு மேலாடை, ஒரு சாறம் மற்றும் பெண்முதியோருக்கு ஒரு சாறி, ஒரு போர்வை ஆகியனவும் அன்றைய நண்பகல் உணவும் வழங்கப்பட்டது.
இது நிகழ்வில் ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இறுதிப்போரில் தங்கள் பிள்ளைகளை இழந்தும் வயது முதிர்ந்த நிலையில் சுமைகளொடும் ஏக்கங்களொடும் வாழ்ந்து வரும் எம் மூத்த சமூகத்தை அரவணைத்து மதிப்பளிக்க வேண்டியது எம் தலையாய கடமைகளில் ஒன்று.
தாயகவிடியலுக்காக இவர்கள் தமது பிள்ளைகளை ஈகை செய்தார்கள். ஒன்று இரண்டு மூன்று நான்கு என இம்மூத்த தலைமுறையின் பிள்ளைகள் மாவீரர்களாகியே இங்கு இத்தமிழ்த்தேசிய இருப்பு இன்றளவிலும் நிலைபெற்றிருக்கிறது; தமிழ்த்தேசியக்கூட்டு ஆன்மா கட்டமைக்கப்பெற்றிருக்கிறது.
அந்த வகையில் ஏக்கத்தோடும் வலியோடும் பிள்ளைகளைப்பறிகொடுத்த தனிமையோடும் தமது நாளாந்த வாழ்வியலைக்கொண்டு செல்லும் எம் மூத்த தலைமுறையினரை அன்போடு அரவணைத்து எமது வாழ்வியலுள் அவர்களை உள்வாங்கி ஒருமித்துப்பயணிப்பது எம் தலையாய கடமை. இன்று இவர்தம் முகங்களில் காணும் மகிழ்ச்சியும் ஆனந்தக்கண்ணீரும் என்றும் நிலைக்கட்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இச்சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கவென எம்மோடு இணைந்த அன்பே சிவம் அமைப்பிற்கு எனது உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.
அதன் பின்னர் அன்பே சிவம் அமைப்பின் இணைப்பாளர் குமணன் அவர்கள் உரையாற்றுகையில் இவ் அமைப்பின் மூலம் செய்யப்படும் பல சேவைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக கல்வி தொடர்பாக அக்கறை செலுத்துவதையும் தெரிவித்திருந்தார்.