நெஞ்சை உலுக்கும் விவசாயியின் செயல்… மகள்களை மாடாக பயன்படுத்தும் தந்தை

187

பொருளாதார நெருக்கடி காரணமாக மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏரில் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது.

நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகளால் போற்றப்பட்ட விவசாயிகளின் நிலை தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து விட்டதாலும், விவசாய பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசும் எவ்வித உதவியும் செய்ய முன்வராததால் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துள்ள விவசாயிகளும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பயிர்கள் வாடுவதாலும், கடனை செலுத்த முடியாததாலும் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தொடர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக மாடு வாங்க காசு இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்த சம்பவம் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.இது குறித்து அந்த விவசாயி சர்தார் பரேலா கூறுகையில், மாடுகள் வாங்க போதிய பண வசதி இல்லை.

மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு செய்ய வேண்டியுள்ளது. வசதியில்லாததால் எனது மகள்கள் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர் என்றார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, சிறுவர்களை இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார்.

SHARE