பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஜாலியாக ஒரு சவால் விடுத்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அந்த சவாலை அவர் முன்வைத்துள்ளார்.
ஃபேஸ்புக்கின் மெஸென்ஜெர் ஆப் மூலம் கால்பந்து விளையாட்டை விளையாட முடியும். ஆனால் இதற்கு ஒருவர் தனது மெஸென்ஜெர் ஆப் மூலம் மற்றவருக்கு கால்பந்து இமோஜியை அனுப்ப வேண்டும்.
அப்படி ஒருவர் அனுப்பினால் அவர் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்து விடலாம். மொபைல் திரையில் விரல்களால் தட்டித் தட்டி பந்தை எவ்வளவு நேரம் அந்தரத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டு.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விளையாட்டை விளையாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இறுதியாக 37 புள்ளிகளைப் பெற்ற மார்க் ஜூக்கர்பெர்க், மெஸன்ஜரில் 37 புள்ளிகளை முந்துவது கடினம், இதை நான் உங்களுக்கு சவாலாகச் சொல்கிறேன் என்று சிரித்துக் கொண்டே நெய்மருக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது 3.1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரலாகியுள்ளது.