நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுதலை மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா?

262

 

அபுஜா,

நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போகோஹரம் பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான ஆட்சியை அமைப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். மேற்கத்திய கல்வி முறையை அவர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள்.

இதன்காரணமாக 2010–ம் ஆண்டில் இருந்து பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளை கொன்றிருக்கிறார்கள்.

276 மாணவிகள் கடத்தல்

இந்த நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14–ந் தேதி அங்கு போர்னோ மாகாணத்தில் சிபோக் நகரில் உள்ள பள்ளிக்குள் புகுந்த, போகோஹரம் பயங்கரவாதிகள் அங்கிருந்து 276 மாணவிகளை கடத்தி சென்றனர்.

அடுத்த சில மாதங்களில் 57 மாணவிகள் அவர்கள் பிடியில் இருந்து நைசாக தப்பி வந்து விட்டனர். ஆனாலும் மற்ற மாணவிகளின் கதி என்ன ஆனது என்பது அங்கு இத்தனை காலமும் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

21 மாணவிகள் விடுதலை

இந்த நிலையில் மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் நேற்று 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 போகோஹரம் பயங்கரவாதிகளை விடுவித்து, இந்த மாணவிகள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விடுவிக்கப்பட்ட மாணவிகள் கும்ஷே என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

பேச்சுவார்த்தையின் பலன்

அந்த நாட்டின் தகவல் துறை மந்திரி லாய் முகமது, 4 போகோஹரம் பயங்கரவாதிகளை விடுவித்துத்தான் 21 மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை மறுத்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘கடுமையான பேச்சுவார்த்தையினாலும், இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையினாலும்தான் மாணவிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

21 மாணவிகள் விடுவிக்கப்பட்டிருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது. போகோஹரம் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள பிற மாணவிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி மந்திரி லாய் முகமது கருத்து தெரிவிக்கும்போது, ‘‘இது முதல் படி. இது பிற அனைத்து மாணவிகளும் விடுவிக்கப்படுவதற்கு ஒரு திருப்பமாக உதவும்’’ என்று கூறினார்.

SHARE