நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்க்கிழமை (19.02.2017) மதியம் 13:00மணிக்கு Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர்.
ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் நியாயமான உரிமைப்போராட்டத்தை ஆதரித்து,அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவது சமூகஅமைப்பான எமது கடமை என்று கருதி நோர்வே தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது.
நோர்வே தமிழச்சங்கம் ஆரம்பித்துவைத்த இந்த நிகழ்வினைத்தொடர்ந்து நோர்வே முழுவதும் உள்ள தமிழர் எமது மக்களின் நிலஆக்கிரமிப்புப் போராட்டத்திற்குத் தம்மாலான ஆதரவுகளை வழங்கி, நோர்வே அரசுக்கு எமது மக்களின் நியாயமான கோரிக்கையைப் புரியவைப்பது அவசியம் என்று நோர்வே தமிழ்ச்சங்கம் கருதுகிறது.
இப்படியான நுண் அரசியலை அடிப்படையாகக்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்குலகத்தின் ஆசீர்வாதங்களுடனேயே இவை நடைபெறுகின்றன என்பதை நாம் மிக அவதானமாகக் கவனிக்க வேண்டும். மேற்குலகத்தில் வாழும் நாம் இதற்கு என்ன செய்யலாம் என்பதைச் சிந்திக்கவேண்டிய முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை மறத்தலாகாது.
ஆனால், இன்றைய நிலையில் எம்மால் நோர்வே அரசுடன் தமிழர் சார்பாகப் பேசுவதற்குரிய ஒரு பலமான அமைப்பாவது இருக்கிறதா? இல்லையே? ஏன்?
2009ம் ஆண்டின் பின் உதிரிகளாக செயற்படும் எம்மை நோர்வேஅரசு கவனத்தில் எடுப்பதில்லை. அதற்கான காரணங்கள் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
எமக்குரிய வாக்குப்பலத்தினை அரசியற் பலமாக மாற்றிக்கொள்ளும் ஒரு நடவடிக்கையினையேனும் எமது தமிழ்ச்சமூகம் செய்துகொள்கிறதா?
இதற்கான பதில்களைச் சிந்திப்போம் எனில் எதிர்காலத்தில் எப்படியான செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்என நோர்வே தமிழ்ச்சங்கம் கருதுகிறது.
கலாநிதி சர்வேந்திரா தருமலிங்கம் அவர்கள் தனது உரையில் நோர்வே தமிழ்ச்சங்கமானது தமிழ்ச் சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆதரவு ஒன்றுகூடலை நடாத்துவதன் மூலம் நோர்வே அரசின் கவனத்தை எமதுபக்கம் திருப்பவுதற்கு முயற்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆதரவு ஒன்றுகூடலின்போது சேர்க்கப்பட்ட ரூபா 104150,- தற்போது போராடிக்கொண்டிருக்கும் மக்களின் அத்தியாவசிய செலவுகளுக்காக அனுப்பப்படுகிறது.
ஒற்றுமையே எமது பலம்!