பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து – புலிகளிடம் கைப்பற்றிய தங்கம் பற்றித் தெரியாது என்கிறார் 

248
முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த கொழும்பு ஊடகமொன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

எனினும், பசில் ராஜபக்ச எந்த சந்தர்ப்பத்திலும் 10 ரூபா பணத்தைச் செலுத்தி சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளவில்லை.

இதனால் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரல்ல.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வருடாந்தம் தமது அங்கத்துவத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனினும் பசில் ராஜபக்ச அவ்வாறு கட்சி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளவில்லை.

இவ்வாறான நபர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து பேசுவது ஆச்சரியப்படக்கூடிய வியடமன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளிடம் கைப்பற்றிய தங்கம் – தனக்கு ஏதும் தெரியாது என்கிறார் பசில்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் அப்பட்டமான பொய் என்று மறுத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

“2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்காக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்ததாக நான் ஒருபோதும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கூறவில்லை. அரசியல் இலாபம் தேடும் வகையில் அவரது  குற்றச்சாட்டுக்கள் அமைந்திருக்கின்றன.

பொன்சேகா நாடாளுமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானவை. அவை முற்றிலும் பொய்யானவை. அவர் கூறுவது போன்று எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், அதனை நான் பொன்சேகாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகின்ற கதை அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த விடயத்தையும் அவரிடம் நான் கூறவில்லை.

சரத் பொன்சேகா இந்தக் குற்றச்சாட்டுக்களை சொந்தமாக கூறவில்லை. நீண்டகால இலக்கு ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் வேட்டையாடல் நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டும்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை மீண்டும் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அது பற்றிய மேலதிக தகவல்கள் எனக்குத் தெரியாது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில்,பொன்சேகாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1386473918basil_r_b

 

SHARE