வெளிநாட்டுப் படகுகள் ஒழுங்குபடுத்தல் திருத்தச்சட்டம் மற்றும் உள்ளூர் இழுவைப்படகுகள் தடைச்சட்டம் போன்றவற்றை முறைப்படி நடைமுறைப்படுத்துங்கள் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது.
யாழ்.பாடி விடுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் வி.சுப்பிரமணியம் தெரிவிக்கையில்,
வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய இழுவைப்படகு விடுவிப்பு தொடர்பாகவும் இழுவை மடித்தொழிலால் ஏற்படும் இழப்புக்கள், மீன்பிடி தொடர்பில் இயற்றப்பட்ட சட்டங்கள், உள்ளூர் இழுவைப் படகுகளின் தாக்கங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தொழில்கள், தென் பகுதி மீனவர்களின் வடபகுதியை நோக்கிய அத்துமீறல்கள் என்பன தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடினோம்.
இந்தியா பல தடவைகள் பல்வேறு விடயங்களைக் கூறியுள்ளபோதிலும் எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வருகின்றது. இவ்வாறான சூழலில் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் விஜயமுனி செய்சா பதவியேற்ற பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகளின் விடுவிப்பு தொடர்பில் அழுத்தங்கள் மேலோங்கி நிற்கின்றன.
இதில் எமது கருத்துக்கள் என்ன என்று கேட்டார்கள். குறிப்பாக இந்தியா எங்களை பலமுறை ஏமாற்றி விட்டது. எங்களுக்கு தந்த உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. எனவே இந்தியாவை நம்பவேண்டாம். அவர்களை நம்பி பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டாம். இதற்கு பரிகாரமாக கடந்த வருடம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இழுவை மடிச் சட்டம் மற்றும் இந்த வருடம் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டவர் படகு ஒழுங்குபடுத்தல் திருத்தச்சட்டம் போன்றவற்றை இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தி எல்லை தாண்டிவருகின்ற இந்திய இழுவைப் படகுகளை கைதுசெய்தால் இழுவைப் படகுகளைத் தடுக்க முடியும்.
குறித்த இரண்டு சட்டங்களையும் முறை யாக நடைமுறைப்படுத்தினால் இந்தி யாவிடம் நாம் செல்லவேண்டிய தேவை யில்லை. மேலும் இவ்விடயம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து ஆராய்வோம் என்று தெரிவித்தார். இதற்கு நாங்கள் நியமிக்கின்ற நபர்களை குழுவாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டார் என்றார்.