யாழ்.வலிகாமம் வடக்கு காங்கேசன்துறையில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கரையோர பகுதியில் உள்ள மக்களுடைய வீடுகளுக்கு, மாதாந்தம் வாடகை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
படையினர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களது பெயர், விபரங்களை தெல்லிப்பளை பிரதேச செயலகம் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டுள்ள காணிகளில் சுமார் 460 ஏக்கர் நிலம் கடந்த மாதம் 4ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மக்கள் அங்கு மீள்குடியேறி வருகின்ற போதும் மக்களது வாழ்வாதார தொழிலான மீன்பிடியை மேற்கொள்ள முடியாமல் குறித்த பிரதேசத்தின் கடற்பகுதி, படையினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, மீள்குடியேற்றப்பட்ட பகுதிக்குரிய கரையோர பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வீடுகளுக்கு மாதாந்தம் வாடகை வழங்குவதற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
17 வீடுகளுக்கு இவ்வாறு மாதாந்த வாடகை வழங்கப்படவுள்ளது. எனினும், குறித்த கரையோர பகுதியை தம்மிடம் மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.