பட்டம் வென்றால் ஊக்கத்தொகை

134

15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜன.13-ந்தேதி ஸ்பெயினை சந்திக்கிறது. 1975-ம் ஆண்டு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த இந்திய அணி அதன் பிறகு எந்த பதக்கமும் வென்றதில்லை. நீண்ட கால ஏக்கத்தை உள்நாட்டில் நடக்கும் இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் தணிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மகுடம் சூடினால் வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய வெள்ளிப்பதக்கத்தை பெற்றால் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும். ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், ‘சீனியர் உலகக் கோப்பை போட்டியில் பதக்க மேடையில் ஏறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இந்த ஊக்கத்தொகை, வீரர்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும் போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்றார்.

maalaimalar

SHARE