காலையில் எழுந்ததும் நேரம் பார்க்க மொபைலை தேடும் இந்த காலத்தில், கைகடிகாரம் எல்லாம் ஸ்டைலுக்காக மட்டும் என்றே மாறிவிட்டது. நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்ட நிலையிலும் மாறாத சில விஷயங்கள் உள்ளன.
அவற்றில் தலையாயது பணம். பணத்திற்கு மாற்றாக ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட பணத்தைச் சேர்க்கவே எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது பல வழிகளில் நமக்கு தெரியாமலேயே நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது. இதோ நீங்கள் கவனிக்க வேண்டிய செலவுகள்.
கேபிள் பில்:
இப்போதெல்லாம் நம் பெரும்பாலான நேரம் வேலையிலேயே கழிகிறது. எப்போதாவது பார்க்கும் டிவிக்கு நாம் மாதம் செலவழிக்கும் தொகை ரூ. 250 லிருந்து ரூ. 600 வரை. எத்தனை சேனல் இருக்கிறது என்று பார்ப்பதற்கே அரை மணி நேரம் வீணாகிவிடுகிறது. நாம் பார்க்கும் சில நிகழ்ச்சிகள், படங்களுக்கு பெரிய தொகையைச் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு பதிலாக மிகக் குறைவான கட்டணத்தில் இணையத்தில் நமக்கு தேவையான நிகழ்ச்சியைப் பார்த்துக்கொள்ளலாம் அல்லது நமக்கு தேவையான சேனல்களை மட்டும் இருக்கும் இணைப்பை எடுத்துக்கொள்ளலாம்.
மொபைல் பில்:
மொபைல் தான் நம்முடைய உலகம் என்றாகிவிட்டதால் அதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும். ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் பேசுகிறோம், எத்தனை மெசேஜ் அனுப்புகிறோம் என்று சிறியதாக ஒரு கணக்கு போட்டு பார்த்து அதற்கேற்ப உள்ள ஆஃபர் பேக்கேஜ்களை எடுத்துக்கொள்ளலாம். நம் எண்ணுக்கு எதாவது பிரத்யேக ஆஃபர் இருக்கிறதா என்று பார்த்து அதனைப் பயன்படுத்திக்கொள்வது, வேறு நெட்வொர்க்கில் சலுகைகள் உள்ளது என்றால் அதற்கு மாற்றிக்கொள்வது போன்றவையும் செலவை குறைக்கும்.
எலக்ட்ரிக் பில்:
மின் கட்டணம் ஷாக்கடிக்கும் வகையில் இருந்தாலும் எல்லோருக்கும் மின்சாரம் நிச்சயம் தேவை. ஆனால் நீங்கள் இப்போது கட்டும் கட்டணத்தைக் கணிசமாக குறைக்க சில வழிகள் உள்ளன. சாதாரண விளைக்குகளைக் காட்டிலும் எல்இடி (LED) விளக்குகளைப் பயன்படுத்தலாம். இந்த விளக்குகள் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் இது குறைவான மின்சக்தியை இழுப்பதால் மின்கட்டணம் பெருமளவில் குறைந்து லாபத்தையே தரும். அடுத்து தேவையற்ற அறைகளில் விளக்கு எரிந்தாலோ, காற்றாடி ஓடிக்கொண்டிருந்தாலோ மறக்காமல் அணைத்துவிட வேண்டும். அதிக நேரம் பயன்படுத்தாமல் இருக்கும் மின் பொருட்களை நிறுத்திவிட வேண்டும். மேலும் வீட்டின் வெப்பநிலை உங்களுடைய மீட்டருக்கு சூடு வைக்கும் என்பதால், உங்கள் வீட்டின் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் சில யூனிட்டுகளைக் குறைக்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும்போது மெயின் மீட்டரை ஆஃப் செய்தால் மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும் என்பதோடு, மின்சாரம் மூலம் ஏற்படும் சில அசம்பாவிதங்களையும் தடுக்கலாம்.
போக்குவரத்து:
உங்களிடம் பைக் இருக்கலாம், கார் இருக்கலாம் ஏன் ஹெலிகாப்டர் கூட இருக்கலாம், எல்லாம் இருந்தாலும் தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர்த்து மற்ற சமயங்களில் பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வது பெரும்பாலான செலவைக் குறைக்கும். குடும்பத்தோடு போகும்போது மட்டும் கார் உபயோகப்படுத்தலாம், தனிநபர்கள் கார்களைத் தவிர்த்து பேருந்து, இரயில் போன்ற போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம். கார்களுக்கு ஆகும் பெட்ரோல் செலவைக் காட்டிலும் நகரங்களை அவற்றைப் பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய கொடுக்கும் செலவு அதிகமாக உள்ளது.
ஓட்டல் சாப்பாடு:
ஆசைக்கு ஒரு நாள் குடும்பத்தோடு சென்று ஓட்டலில் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் தினமும் ஓட்டலுக்குச் சென்றோ அல்லது ஆர்டர் செய்தோ சாப்பிடுவது செலவை அதிகரிப்பதோடு உடல்நலனையும் கெடுத்து விடுகிறது. உயர்தர நட்சத்திர ஓட்டல் என்றாலும், சில நேரங்களில் அவை நமக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். இதனால் மருத்துவ செலவுகளும் அதிகமாகும். ஃபாஸ்ட் புட் வகைகளைப் பெருமளவில் தவிர்ப்பது நல்லது.
மருத்துவ செலவுகள்:
தலைவலி, சளி, ஜுரம் என எது வந்தாலும் உடனே மெடிக்கலுக்குப் போய் அந்த மாத்திரை இந்த மாத்திரை என்று நாமே கேட்டு வாங்கி போட்டுக்கொள்கிறோம். இது சரியா? மருந்து பொருட்கள் சந்தையில் போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் என உலாவுவதால் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் சென்றால் செலவாகுமே என்று எதோ ஒரு மாத்திரையை மருந்தை வாங்கி சாப்பிட்டால் பல சமயங்களில் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரலாம். அப்போது பெருந்தொகையை செலவு செய்வதற்கு நம்பகமான ஒரு மருத்துவரை அணுகி ஆலோசித்து மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது. இதற்கெல்லாம் மேலாக குறைவான பிரீமியமில் சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அவசர நெருக்கடிகளில் உதவும் என்பதோடு செலவைப் பொருத்தமட்டில் நிச்சயம் லாபகரமானதாக இருக்கும்.
பொழுதுபோக்கு
“டிக்கெட்டே அம்பது ரூபாதான், பாப்கார்ன் நூறு ரூபாயா?” என்று யாராவது வாய்பிளந்தால் அவர் நகரத்திற்கு புதுசு என்று கணித்துவிடலாம். நகரங்களில் மல்டிப்ளக்ஸ் கலாச்சாரம் வந்ததிலிருந்து திண்பண்டங்களின் விலை அதிகரித்து தங்க விலை ஏறும் போது கொடுக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கின்றன. ஒரு நாள் குடும்பத்தோடு படம் பார்க்கப் போனால் ஆயிரம் ரூபாயை தியேட்டருக்கு மொய் செய்துவிட்டு வருவது போல இருக்கும். ஆனால் நீங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு வாட்டர் கேன் தண்ணீர், கொஞ்சம் திண்பண்டங்கள் என எடுத்துக்கொண்டு போனால் (சில தியேட்டர்களில் இதற்கு சாமர்த்தியம் தேவை, சில மல்டிப்ளக்ஸ்களில் சாமர்த்தியம் வேலைக்காகாமல் போகலாம்) ஏறக்குறைய ஆயிரம் ரூபாயில் ஐநூறு ரூபாயை மிச்சப்படுத்தலாம்.
மளிகைப் பொருட்கள்:
சூப்பர் மார்க்கெட் வந்தாலும் வந்துச்சு… நகரும் கூடையைத் தள்ளிக்கொண்டே ஏகப்பட்ட மளிகைப் பொருட்களை யோசிக்காமல் வாங்கி விடுகிறோம். மளிகைப் பொருட்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் பெரும்பாலான மளிகைப் பொருட்கள் சில நாட்கள் மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் பயன்படுத்தாவிட்டால் வீணாகிவிடும். அதனால் திட்டமிட்டு மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும். வீட்டில் எத்தனை பேர் என்று கணக்கிட்டு அதற்கேற்ப காய்கறிகளை வாங்க வேண்டும். அதிகமாக வாங்கி பிறகு வீணானவற்றை குப்பையில் கொட்டும் நிலைதான் வரும். இதனால் காசும் விரயம்தான்.
காபி:
நீங்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு எத்தனை முறை காபி குடிக்கிறீர்கள்? நீங்கள் கடையில் குடிக்கிறீர்களா அல்லது வீட்டிலா? வீட்டில் குடிக்கும் காபி சுமாராக இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்கும். கடையில் குடிக்கும் காபி தரமானதா ஆரோக்கியமானதா என்று பார்ப்பதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை. ஆகையால் நல்ல காபி பொடியை வாங்கி வீட்டிலேயே போட்டு குடிப்பது நல்லது. இதனால் செலவும் மிச்சமாகும். இப்போது உங்களுக்கு எவ்வளவு மிச்சமாகியுள்ளது என்று கணக்குப் போட்டு பாருங்களேன்.
– See more at: http://www.manithan.com/news/20160823121258#sthash.0fjsCdX3.dpuf