பணத்தை மிச்சப்படுத்தும், ‘புத்திசாலி’ ஜன்னல் கண்ணாடி

237

புத்திசாலி, ஜன்னல், கண்ணாடி, மின்சாரம்

பெரிய அலுவலக கட்டடங்கள் முதல் வீடுகள் வரை, பட்டப் பகலிலேயே மின் விளக்குகள் எரிகின்றன. இந்த மின் விரயத்தை தடுக்க கண்ணாடி ஜன்னல்கள் உதவும் என்றாலும், கண்ணாடி ஜன்னல்களும் உள்ளே வரும் வெளிச்சத்தை தடுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலுள்ள, இ.பி.எப்.எல் மற்றும் ‘எம்பா’ எனப்படும் இரு ஆராய்ச்சி நிலையங்கள் இதற்கு தீர்வு கண்டுள்ளன.ஒரு படலத்தின் மீது லேசர் கதிர்களால் மிக நுண்ணிய குழிகளை ஏற்படுத்தி அவற்றை நுண் குழி ஆடிகள் போல ஆக்கினர். இவற்றுக்கு ‘காம்பவுண்ட் பாரபோலிக் கான்சன்ட்ரேட்டர்’ ஆடிகள் என்று பெயர். இத்தகைய படலத்தை கண்ணாடி மேல் ஒட்டலாம். அல்லது இரு கண்ணாடிகளுக்கு இடையேயும் ஒட்ட முடியும். நுண் ஆடிகளைக்கொண்ட கண்ணாடிகள், கட்டடத்திற்குள், 80 சதவீத சூரிய ஒளியை சேதாரமின்றி, 60 டிகிரி கோணங்கள் வரை செலுத்தின. இதனால், ஒரு அறையின் மிக இருண்ட மூலையில்கூட நல்ல வெளிச்சம் பாய்ந்தது. அதே சமயம் சூரிய வெப்பத்தை அவை கட்டடத்திற்குள் செலுத்தின.

இந்தப் படலத்தால் கண்ணாடி வழியே தெரியும் காட்சிகள் துளியும் பாதிக்கப்படவில்லை என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எல்லாவற்றையும்விட முக்கியமாக, வெயில் மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டுக்கும் ஏற்றதாக இந்த நுண் ஆடிகள் பதித்த கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதுதான் ஆச்சரியம். சுவிஸ் விஞ்ஞானிகள், படலத்தின் மீது பதித்துள்ள நுண் ஆடிகள் குறிப்பிட்ட கோணத்தில் லேசர் மூலம் பதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வெயில் காலத்தில் சூரியன் உயரே இருந்து வெளிவிடும் கதிர்களில் உள்ள வெப்பத்தில் பெரும்பாலானவை கட்டடத்திற்கு வெளியேயே சிதறடிக்கப்படுகிறது. குளிர் காலத்தில், சூரியன் சற்று தாழ்வாக இருப்பதால், அதன் வெப்பத்தில் கணிசமானவை, கட்டடத்திற்கு உள்ளே கடத்தப்படுகின்றன. இதனால், வெயில்காலத்தில் குளிர்ச்சியும், குளிர்காலத்தில் கதகதப்பையும் இந்தக் கண்ணாடிகளால் உருவாக்க முடியும்.பகலில் விளக்குகளுக்கான மின் செலவு, குளிர்ச்சியூட்டல் மற்றும் கதகதப்பூட்டலுக்கான மின்சாரம் ஆகியவை இந்த நுண் ஆடி ஜன்னலால் நிறைய மீதமாகும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE