
இதில் பான்கிராப்ட் மீதான தடை காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வருகிறது. வருகிற 30-ந்தேதி நடக்கும் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பந்தை சேதப்படுத்த தன்னை தூண்டியது யார்? என்ற தகவலை பான்கிராப்ட் முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக 26 வயதான பான்கிராப்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘போட்டியில் அன்று நாங்கள் இருந்த சூழ்நிலையை வைத்து பந்தை சேதப்படுத்தும் யோசனையை வழங்கியது டேவிட் வார்னர் தான். இதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்த அவர், சொல்லும் நேரத்தில் அதை செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. அணியில் எனக்கு இருந்த மதிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக இது அமைந்தது. நானும் மூத்த வீரர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் அதை செய்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உணர்ந்திருந்தேன்.
ஒரு வேளை வார்னரின் ஆலோசனைக்கு நான் மறுப்பு தெரிவித்து இருந்தால், என்ன நடந்திருக்கும் என்று பல முறை எனக்குள் கேள்வி கேட்டு இருக்கிறேன். அப்போதும் பல பிரச்சினையை சந்தித்து இருப்பேன். அணியில் ஒவ்வொரு வீரர்களையும் ஏமாற்றிவிட்டதாக நினைத்து இருப்பேன். போட்டியின் வெற்றி வாய்ப்பு என்னால் பறிபோனதாக கருதியிருப்பேன்.
நடந்த சம்பவத்துக்கு மற்றவர்களை பொறுப்பேற்க விடவில்லை. நான் தான் இந்த செயலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டேன். ஏனெனில் இந்த தவறை நான் செய்யாமல் இருந்திருக்கலாம். தவறு செய்யாமல் தப்பிக்க வாய்ப்பு இருந்தும் தவறிழைத்தேன்’ என்றார்.