பயங்கரவாதம் குறித்து, இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள், தடுமாறுகின்றன, என்கிறார் சிறிபாலடி சில்வா:

572

பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள் இன்று தடுமாறி வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளினால் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும், இந்த நாடுகள் இலங்கையை மலர்களை வைத்து வணங்க வேண்டுமெனனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் பற்றி பாடம் கற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவைக்கும் ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்தத்தை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் கோரியிருந்ததாகவும், இலங்கை வெற்றிகரகமாக பயங்கரவாதத்தை இல்லாதொழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், சுவீடன், பிரித்தானிய, அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்திருந்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதுவிட்டால் ஒருபோதும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என மேற்குலக நாடுகள் இலங்கைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் ஏற்படாத காரணத்தினாலா பிரான்ஸில் தாக்குதல் நடத்தப்பட்டு 150 பேர் கொல்லப்பட்டனர் என தாம் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை சில விடயங்களைக் கொண்டு வரையறுத்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்:-

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலான்டேக்கு அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியில் இந்த கண்டனத்தையும் இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து பிரான்ஸ் மக்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மிக மோசமாக பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE