இக்கோரத் தாக்குதலையிட்டு பெல்ஜியம் மூன்று நாட்கள் துக்க தினத்தை அறிவித்துள்ளதுடன் முழு ஐரோப்பியக் கண்டமும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
அத்தோடு இக்கோரத் தாக்குதலை முழு உலகமும் கண்டித்து தம் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைத் தலைவர் பெடரிக்கா மொக்கெரினி ‘இத்தாக்குதல் சம்பவம் முழு ஐரோப்பாவுக்குமே சோக தினத்தை ஏற்படுத்தியுள்ளது’எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ‘பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போவதாக ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘ ‘பயங்கரவாதம் காரணமாக நாம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்தோம். அதனால் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக முழு உலகமும் ஒன்றிணைந்து செயற்படுவது மிக அவசியம்’ என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு இக்கோரத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிரான கண்டனக் கணைகள் வந்து குவிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ‘இத்தாக்குதலுக்கு தாமே பொறுப்பாளிகள் ‘ என தற்போது உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்பாக விளங்கும் ஐ. எஸ். அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாக கோரத் தாக்குதல் இடம்பெற்றதும் உரிமை கோருவது போன்று இம்முறையும் இவ்வமைப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்த அமைப்பு கடந்த சில வருடங்களாக ஈராக் மற்றும் சிரியாவின் சில பிரதேசங்களை ஆயுத முனையில் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து காட்டுமிராண்டித்தனமாக மக்களை நடத்தி வருகின்றது.
இவர்கள் தம் எதிரிகளை நடாத்தும் விதமும் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் கூட குரூரமானவை. மனித நாகரிகத்திற்கே எதிரானவை.
இவர்களது செயற்பாடுகள் இஸ்லாத்திற்கும் அதன் விழுமியங்களுக்கும் முரணானவை. அதனால் தான் இஸ்லாமிய உலகின் முன்னணி சிந்தனையாளர்களும் அறிஞர்களும் அவ்வமைப்பின் செயற்பாடுகளை நிராகரித்துள்ளனர்.
இருந்தும் கூட இஸ்லாத்தின் பெயரைத் தாங்கியபடியே ஐ. எஸ். அமைப்பினர் மனிதாபிமானத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இவர்கள் எவரினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செயற்படுவது நன்கு தெளிவாகின்றது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பிரசல்ஸ் தாக்குதலை எடுத்துப் பார்த்தால் அது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இது மிகத் தெளிவானது.
அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற குரூரமான தாக்குதலில் பிரசல்ஸைச் சேர்ந்த நால்வர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டு நான்கு நாட்களில் தான் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேநேரம் சில பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகளால் உலகில் முழு முஸ்லிம் சமூகமும் தவறாக நோக்கப்படுவது கவலையளிக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் பங் கீ மூன் சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான சூழலில் தான் இக்கோரத் தாக்கல் நடாத்தப்பட்டு 34 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 170 பேர் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் குறித்து மிக நுணுக்கமாக நோக்க வேண்டும்.
ஏனெனில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் சிரியாவின் கொபானியைச் சேர்ந்த ஐலான் குர்தியின் குடும்பம் கனடா நாட்டிடம் அகதி அந்தஸ்து கோரிய போதிலும் அது மறுக்கப்பட்டதால் அவர்கள் வேறொரு நாட்டுக்கு மத்திய தரைக்கடல் வழியாகச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் ஈராக், சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு அகதிகளை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்கத் தொடங்கின.
அத்தோடு தம் நாடுகளில் அடைக்கலம் கொடுக்கவும் அந்நாடுகள் முன்வந்தன. இதனால் கடந்த வருடம் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஈராக், சிரிய உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி கால்நடையாகப் படையெடுத்தனர்.
இவ்வாறான சூழலில் தான் பாரிஸ் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனூடாக சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் மனமாற்றம் ஏற்படுவதைத் தடுக்கவே முயற்சி செய்யப்பட்டது என்பது நன்கு தெளிவானது.
இதேவேளை சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பாகவும், முஸ்லிம்கள் குறித்தும் ஐரோப்பிய நாடுகளிலும் மேற்குலகிலும் அண்மைக் காலமாக மனமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிவிப்பும் நல்ல எடுத்துக்காட்டு.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான மனமாற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இப்படியான தாக்குதல்கள் அவ்வப்போது நடாத்தப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் இது மனித சமூகத்தினால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடாகும்.
ஐரோப்பாவுக்கும் மேற்குலகுக்கும் எதிரானவர்களாகக் ஒரு சமூகத்தை காட்டுவதற்காக அப்பாவிகள் மீது கோரத் தாக்குதல்கள் நடாத்துவதும் அவர்களைக் கொன்று குவிப்பதும் மனித சமூகத்திற்கே எதிரான செயலாகும்.
ஆகவே முழு உலகும் இதய சுத்தியோடு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அப்போது தான் உலகில் மனிதாபிமானமும், அமைதி சமாதானமும் கோலோச்சும்.