யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், பயணி ஒருவரை தரதரவென இழுத்து விமானத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. இதில் குறித்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு விமானத்தில் உட்கார இடம் இல்லாததால் பயணிகள் சிலரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதலாக நான்கு டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கியது தான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பயணிகள் சிலர் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்தபோது, விமான ஊழியர்கள் சிலர், அவர்களுக்கு உட்கார இடமில்லாத காரணத்தினால் பயணிகளிடம் பயணத்தை ரத்து செய்தால் பணம் தருவதாக பேரம் பேசினர்.
பயணிகள் யாரும் அதற்கு முன்வரவில்லை. இதனிடையே 69 வயதான பயணி ஒருவரிடம் விமான ஊழியர்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயணியை தரதரவென இழுத்துச் சென்று விமானத்தில் இருந்து வெளியேற்றினர். பயணிக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது’ என்றனர்.
இந்த காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அந்நிறுவனம் தரப்பில், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது. ஊழியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூகவலைதளத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.