நேற்று முன் தினம் ஒடோட்ரோமோ எர்மெனொஸ் ரொட்றிகியூஸ் ஓடுதளத்தில் நடைபெற்ற ஆண்டின் 19ஆவது சுற்றான மெக்சிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான லிவிஸ் ஹமில்டன், நான்காவது இடம் பிடிதது 12 புள்ளிகளை பெற்றார்.
இந்த போட்டியில் 7ஆவது இடத்துக்குள் வந்தாலே சம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹமில்டன் 4ஆவது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ஐந்தாவது உலக சம்பியன் பட்டத்துக்கு சொந்தக் காரரானார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு துணை நின்ற இரசிகர்களுக்கு காணொளி வடிவில் வாழ்த்து செய்தியொன்றினை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இவ்வாண்டு மிகவும் எதிர்பாராத வகையில் அமைந்திருந்தது. இது கடினமான ஆண்டாக அமைந்திருந்ததுடன், எதிர்வரும் காலங்களில் இதனைவிட மிகப்பெரிய விடயங்களையும், சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன்.
அணிக்காக நாம் இன்னும் ஒரு பாரிய வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, இப்போதைக்கு அந்த விடயத்தை நிறைவேற்றுவதே எனது ஒரே கவனம்.
இந்நிலையில், உலகம் முழுவதும் பயணம் செய்து இந்த ஆண்டு முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.
பிரேசில் கிராண்ட்பிரி, அபுதாபி கிராண்ட்பிரி என இரண்டு பந்தயங்ககள் மீதமிருக்கும் நிலையில் லீவிஸ் ஹமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார்.
அத்துடன் பர்முலா- 1 உலக சம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில், 7 முறை சம்பியன் பட்டங்கள் வென்று ஜேர்மனியின் மைக்கேல் சூமாக்கர் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த படியாக, 5 முறை சம்பியன் பட்டங்கள் வென்ற அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் தற்போது ஹமில்டன் இணைந்துள்ளார்.