பலஸ்தீனம் தொடர்பில் இலங்கையின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன அண்மையில் எழுப்பிய கேள்விக்காக இந்த பதிலை, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் ஜெரூசலத்தில் அமைந்துள்ள பலஸ்தீனத்தின் வரலாற்று மலைக்கோயில் அழைக்கப்படும் அல் ஹராம் அல் செரீப் என்ற தல விடயத்தில் இஸ்ரேல் அத்துமீறி செயற்படுவதாக கூறி யுனெஸ்கோ யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.
எனினும் அந்த யோசனை வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்காமை தொடர்பிலேயே தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த யோசனை தொடர்பில் யுனெஸ்கோவின் நிறைவேற்றுக் குழுவில் உள்ள 58 நாடுகள் மத்தியில் இணக்கங்கள் ஏற்படவில்லை.
அத்துடன் உலகில் நான்காவது முஸ்லிம் சனத்தொகையை கொண்டுள்ள இந்தியா உட்பட்ட அணிசேரா நாடுகளும் இந்த யோசனையில் வாக்களிக்கவில்லை.
எனவே இந்த யோசனையினால் எவ்வித பயன்களும் ஏற்படப்போவதில்லை என்ற காரணத்தினால் இலங்கை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் இந்த முடிவு யோசனையை எதிர்ப்பதாக இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.