ரகசியங்கள் பலவிதமானவை. ஆழ்கடல் தொடங்கி இமயமலை வரையிலும் உலகின் ரகசியங்கள் விரிந்து கிடக்கின்றன. அழகின் ரகசியம், அன்பின் ரகசியம், ஆன்மிகத்தின் ரகசியம், மன்மத ரகசியம் என்று ரகசியங்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது. காலப்போக்கில் மற்றவருக்கு கூறக்கூடிய ரகசியங்கள், கடைசிமட்டும் சொல்லவே கூடாத ரகசியங்கள் என இருவகைகள் உள்ளன.
ஊருக்குத்தெரிந்த ரகசியங்களும் ரகசியம் என நாம் மட்டும் நினைத்துக் கொண்டிருக்கின்ற விடயங்களும் இருக்கின்றன. கணவன் – மனைவியிடமும், பெற்றோர் – பிள்ளைகளிடமும், குடும்பம் – உறவுகளுக்கு இடையிலும் முக்கியமான ரகசியங்கள் பல பொதிந்து கிடக்கின்றன.
அரசியலைப் பொறுத்தமட்டில், மக்கள் பற்றிய ரகசியங்கள் அரசியல்வாதிகளிடமும் அரசியல்வாதிகள் பற்றிய ரகசியங்கள் மக்களிடமும் பத்திரமாக இருக்கின்றன.
ஆனால் மக்கள் பற்றிய ரகசியங்களை விடவும் அரசியல்வாதிகள் பற்றி மக்களிடம் இருக்கும் ரகசியங்களே அதிகமானவை எனக் கூறலாம். ஏனென்றால் மக்கள் அரசியல்வாதிகளிடம் எதையும் மறைப்பதில்லை.
அரசியல் செய்வோரே தம்மை பரிசுத்தமானவர்களாக காட்டிக் கொள்வதற்காக தமது குறைகளை ரகசியங்களாக மறைத்து வைக்கின்ற பழக்கத்தை கொண்டுள்ளனர்.
தமக்கு மட்டுமே தெரியும் என அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கும் பல விடயங்கள் ஊருக்குத் தெரிந்த ரகசியங்களாகவே இருப்பது சுவாரஸ்யமானது.
அச்சுறுத்தும் அறிக்கை
இன்னும் 20 நாட்களில் நடைபெறப் போகும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இந்த நாட்டின் வரலாற்றில் சில திட்டவட்டமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லப் போகின்றது.
இத் தேர்தல் பற்றி பெரும்பான்மை கட்சிகள் மட்டுமின்றி தமிழ் கட்சிகளும் அடிக்கடி சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளும் தமது வாக்கு வங்கிகளில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர்.
ஒரு சமூகம் என்ற அடிப்படையில் பரந்துபட்ட செயலாற்றலையும், ஒரு பொதுத் தளத்தில் வேலை செய்வதையும் முஸ்லிம் அரசியலில் தற்சமயம் காணக் கிடைப்பதில்லை.
இத் தேர்தலில் நல்லாட்சியின் பங்காளர்கள் ஒரு புறத்தில் போட்டியிடுகின்றனர். மறுபுறத்தில், முன்னாள் ஜனாதிபதியும் பொது பலசேனாவின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
அந்த வகையில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாவரும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகத்தை வகுத்திருந்தால் அது மிகவும் புத்திசாலித்தனமானது. மக்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென உரத்த தொனியில் பேசுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டி ஒரு முன்னுதாரணமாக இருந்திருப்பார்களேயானால், மக்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு அவர்களுக்குப் பின்னால் நின்றிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் இன்னுமின்னும் தங்களுடைய பதவி பட்டங்களுக்காகவும் கட்சியை வளர்ப்பதற்காகவும் மக்களை பிரித்தாளும் அரசியல் தந்திரத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முறை தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஏதோ ஒரு அடிப்படையில் ஒருமித்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.
ஒரே கூட்டணியாக எல்லா இடங்களிலும் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.
மாவட்டங்களை தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது வேட்பாளர்களை கலந்துபேசி நியமித்திருக்கலாம்.
ஆனால் இவை எதையும் செய்ய தவறிவிட்டன முஸ்லிம் கட்சிகள். இவ்வாறு, கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடு என்பது இல்லாமல் போன காலம் கடந்து, இப்போது ஒரு தனிக் கட்சிக்குள்ளே ஏகப்பட்ட முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவிட்டன. பெரிய முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சில தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் உடைந்து விடக்கூடாது என்பதற்காக கட்சியை கட்டிக்காத்த போராளியான நான் இம்முறை மட்டக்களப்பு வேட்பாளர்களை தெரிவுசெய்வதில் இடம்பெற்ற உள்ளரங்கங்களை மேடைபோட்டு வெளிப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், மு.கா. தவிசாளரின் பேச்சைக் கேட்டால் வேட்பாளர் தெரிவு பற்றி மட்டுமின்றி, அவரிடம் கட்சி பற்றிய வேறுபல ரகசியங்களும் இருப்பது போல்தான் தெரிகின்றது. அவற்றை எல்லாம் தலைமைக்கு ஞாபகப்படுத்துவதன் மூலம் எச்சரிக்கை விடுவதற்கு பஷீர் முனைவதாகவும் கருத முடியும்.
பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பேராசை கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட அநேக முக்கியஸ்தர்களுக்கு இருந்தது.
ஆயினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிடும் வியூகத்தை கட்சி வகுத்ததால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
கட்சி தனித்துப் போட்டியிட்டிருந்தால் ஊருக்கொரு வேட்பாளரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் யானையில் வந்ததால் குறிப்பிட்ட சில ஆளுமைகளுக்கே வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பழைய குதிரைகளில் முஸ்லிம் காங்கிரஸ் பந்தயம் கட்டியிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலும் புதிய குதிரைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு தீர்மானங்களுமே சமகாலத்தில் கட்சி உறுப்பினர்களாலும் ஆதரவாளர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
பழையவர்களையும் புதியவர்களையும் கலந்து மாவட்டத்தில் எல்லா பகுதிகளையும் ஓரளவுக்கு உள்ளடக்கும் விதத்தில் பரவலாக களமிறக்கியிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என்பதைக் கூட உயர்பீடம் முன்னுணர்ந்து கொள்ளவில்லையோ என்பது வினோதமாக இருக்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் அறிக்கை வெளியாகி இருக்கின்றது.
மறுபுறத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு ஆதரவாக வாக்குத்திரட்டுவதில் இருந்தும் பஷீர் விலகி இருப்பது போலவும் தென்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது வேட்பாளர் பட்டியலிலும் தேசியப் பட்டியலிலும் தனது பெயரைப் போடாமல் புறமொதுக்கி இருக்கின்றமை அவருக்கு பெரியதொரு சிக்கலை தோற்றுவித்திருக்கின்றது.
இதனால், இவரிடம் ஏதாவது ரகசியங்கள், பிடிகள் இருந்தால் மறைமுகமாக அதனை தலைவருக்கு ஞாபகப்படுத்தி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இவ்வாறான அறிக்கை ஒன்றை சேகுதாவுத் விட்டிருக்கின்றார் என்பது பொதுமக்களின் கணிப்பு.
மக்களிடமுள்ள பிடி வெளியில் தெரியாத விடயங்கள் அல்லது ரகசியங்கள் என்று வரும்போது, எல்லோரிடமும் அவ்வாறான நூற்றுக்கணக்கான ரகசியங்கள் இருக்கின்றன.
கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் மற்றும் தலைவர் போன்றோர் தொடர்பான ரகசியங்கள் தவிசாளரிடம் நிச்சயமாக இருக்கலாம். அதேபோன்று தவிசாளரின் கடந்தகாலம் பற்றிய பதிவுகளும் ரகசியங்களும் கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்களிடையே இருக்கலாம் என்பதையும் இங்கு மறந்து விடக்கூடாது.
இவற்றையெல்லாம் பொதுமக்களுக்கு சொல்லாம்ல் மறைப்பதே பெருங்குற்றம் என்ற நிலையில், காலம் கடந்து அதைச் சொல்வதும் அதனால் குப்பையை குழப்புவதும் பாரதூரமானதாகவே இருக்கும்.
காங்கிரஸ்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் நடக்கின்ற திரைமறைவு நடவடிக்கைகளை அறியாத அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல.
மக்கள் தம்மிடமுள்ள ரகசியங்களை வெளியில் சொல்லப்போனால் கிட்டத்தட்ட 85 வீதமான முஸ்லிம் அரசியல்வாதிகள் வேறு தொழில் தேட வேண்டியிருக்கும்.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸூம் விதிவிலக்கல்ல. அரசியல் என்பது மிகவும் சிரமமான, அர்ப்பணிப்பை வேண்டிநிற்கும் தொழில்வாண்மை என்பது மக்களுக்கு தெரிந்திருப்பதாலும் சில விடயங்கள் அரசியலில் தவிர்க்க முடியாதவை என்பதை அவர்கள் அறிந்திருப்பதாலும் இன்னும் மக்கள் அவை பற்றி பேசாமல் இருக்கின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கட்சியின் முக்கிய போராளி என்பதிலும் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்பதிலும் மறுபேச்சுக்கே இடமில்லை.
கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடக் கூடாது என கட்டிக்காத்தவன் நான் என அவர் குறிப்பிட்டுள்ளதும் உண்மையாகவே இருக்கட்டும். ஆயினும் கடந்த சில வருடங்களாக அவர் கட்சிக்குள் இருந்து கொண்டு திரைக்குப் பின்னால் செய்த வேலைகள் பரவலாக விமர்சிக்கப்பட்ட ரகசியங்களே.
குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் கட்சி அதிருப்தியடைந்து இருந்த வேளையில் கட்சியின் கட்டுக்கோப்பை தவிசாளர் எந்தளவுக்கு பாதுகாத்தார் என்பதை இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு தேர்தல் காலத்தில் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தவிசாளர் அறிவித்த போதும் அத்தேர்தல் முடியும் வரைக்கும் ஒரு நிழல் அமைச்சராகவே செயலாற்றியதாக தகவல்கள் கசிந்திருந்தன.
அதேபோல் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்ட பிற்பாடு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தவிசாளரின் வாகனங்கள் தொடர்ந்தும் அவரது பாவனைக்காக திருப்பி அனுப்பப்பட்டமையும் கடைசிமட்டும் பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டமையும் கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாத ரகசியமல்ல.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்திருந்த வேளையில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அப்போதைய ஜனாதிபதிக்கு எழுதிய அன்புமடல் பற்றியும் அதன் இறுதிவரிகளில் ஒளிந்திருந்த ரகசியம் பற்றியும் கட்சியின் தலைவர், செயலாளருக்கு மட்டுமல்ல மகா ஜனங்களுக்கும் நன்றாக தெரியும்.
ஆனால் இவற்றை எல்லாம் கட்சித் தலைமை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தவும் இல்லை, செயலாளர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இல்லை என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவும்.
இதுபோல இன்னும் நிறைய ரகசியங்கள் கட்சிக்குள்ளே இருக்கின்றன. கட்சியை முன்னொரு காலத்தில் வழக்குப் போட்டவருக்கு பிற்காலத்தில் முதலமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதும், கட்சித் தலைவரை நோன்பு திறக்க விடாமல் தடுத்தவர் பின்னர் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதும், இம்முறை தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படாமையும், முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதியுடன் உறவை முறித்துக் கொண்ட பின்னரும் ஓரிருவர் இரகசிய சந்திப்புகளை மேற்கொண்டதும், மாகாண அமைச்சர் ஒருவர் கடந்த தேர்தலுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிற்பாடும் அதனை பல நாட்கள் வரை சுகித்ததும், ஒரு சிலருக்கே தொடர்ச்சியாக பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்படுவதும், ஏன் குமாரி குரே விவகாரத்தில் மறைந்திருந்த சூட்சுமங்கள்.
என்று எத்தனையோ விடயங்களில் ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. நெடுங்கால வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் கட்சி என்ற அடிப்படையில் மு.கா. கட்சி மற்றும் உறுப்பினர்கள் பற்றி மறைக்கப்பட்ட விடயங்கள் ஏராளமிருக்கலாம்.
செய்ய வேண்டியது
உண்மையாகச் சொல்லப் போனால், கட்சியுடன் போராளிகளும் ஆதரவாளர்களும் உண்மைக்குண்மையாக இருக்கின்றனர். கட்சிக்கு மறைக்க வேண்டிய விஷயங்களும் அவர்களிடம் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மக்களால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சிக்குள் ரகசியமான முறையில் எந்த நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது என்பதே மக்களின் எண்ணம்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியானது தமது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், இவ்வளவு காலமும் திட்டமிட்டு ஏதாவது விடயம் மறைக்கப்பட்டதாக குறிப்பிட்டு, அதனை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தர்ப்பம் பார்த்து வெளியிட நினைப்பது சுயநலத்தை சார்ந்ததாக வகைப்படுத்தப்படும்.
உள்வீட்டு சம்பவங்களை கட்சியின் கட்டுக்கோப்பு என்ற பெயரிலும், பிழையான தீர்மானங்களை மஷூரா என்ற தோரணையிலும் மறைத்து வைத்துக் கொண்டு, பின்னொரு நாளில் கட்சி தாவுகின்றபோது அல்லது கட்சியின் நடவடிக்கையில் அதிருப்தி அடையும் போது அதனை வெ ளியிடுவது அபத்தமானது.
அதுவும் அதனை வெளியிடுவதற்கு முன்னதாக வெளியிடப் போவதாக அறிவிப்பது எதையோ சாதித்துக் கொள்வதற்கான உத்தி என்ற அவதானிப்பும் இதிலுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரோ அல்லது வேறு எந்த உறுப்பினரோ, அவ்வாறில்லாவிடின் வேறு சிறுபான்மை கட்சிகளின் அங்கத்தவர்களோ எந்தவொரு விடயத்தையும் உள்நோக்கத்தோடு மக்களிடமிருந்து மறைக்கக் கூடாது.
ஒரு கட்சியின் ஒரு முக்கியமான தீர்மானம் ஏதோவொரு காரணத்திற்காக பிழையாக எடுக்கப்பட்ட போது அதனை மறைத்துவிட்டு காலம் தாழ்த்தி அம்பலப்படுத்துகின்றார்கள் என்றால், இவ்வளவு காலமும் அதனை மறைத்து வைத்ததன் மூலம் அவ்விடயத்தில் அவர்களுக்கும் பங்கிருக்கின்றது என்றுதானே அர்த்தம்?
அது ஒரு பிழையான தீர்மானமாக இருந்து, அதனால் பின்னர் சமூகம் இழப்புக்களை சந்தித்திருந்தால் அதற்கு வெளிப்படுத்துனர்கள் அல்லது பகிரங்கமாக்குவோரும் பங்காளிகளே என்பதை அடிக்கோடிட்ட எழுத்துக்களால் குறிப்பிட விரும்புகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்களிடம் பஷீர் சேகுதாவூத்தின் மேற்படி கருத்து பற்றி கேட்டால், முதலில் ஒரு சிரிப்பு சிரிக்கின்றார்கள்.
பின்னர், அப்படியான மறைக்கப்பட்ட விடயங்கள் ஏதுமிருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை தலைவருக்கும் அவருக்கும் இடையில் ஏதாவது இருக்கலாம்.
இருந்தால் வெளிப்படுத்தச் சொல்லுங்கள் நாமும் அறிவதற்கு ஆவலாக இருக்கின்றோம் என்கின்றனர் ஹாஸ்யமாக. ஆனால் இவ்வாறு செய்வதால் என்ன பயன்? தவிசாளர் ஒன்றைச் சொல்ல, தவிசாளர் பற்றி தலைவர் வேறொன்றை சொல்லத் தலைப்படுவார்.
தலைவரும் தவிசாளரும் முரண்பட்டால், கட்சிக்கு வெளியிலிருப்போர் மேலும் பல ரகசியங்களை அம்பலப்படுத்த வேண்டியேற்படும்.
எந்தக் கட்சிக் காரராக இருந்தாலும் அவர் யாராகினும்.. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவராக அவர் இருப்பாராயின், கட்சிக்குள் பிழையான தீர்மானம் எடுக்கின்றபோது உடனடியாக அது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தேவையேற்பட்டால் கட்சியிலிருந்து விலகி வெளியில் வந்து மக்களிடையே நடந்ததை கூறக் கூடிய தைரியம் இருக்க வேண்டும். ஒரு குறித்த நபர் கட்சியை விட்டு வெளியேறுவதால் ஒட்டுமொத்தமாக அக்கட்சியே வீழ்ச்சியடைந்து விடும் என்று கணக்குப் போடுவது அரசியல் அறியாமையே அன்றி வேறொன்றுமில்லை.
பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இந்த நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியும், தெளிவுபடுத்த வேண்டிய ரகசியங்களும் வேறுபட்டவை.
குறிப்பாக இந்த மாபெரும் அரசியல் இயக்கத்தின் காரணகர்த்தாவான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணத்தை பற்றிய மர்மத்தையும் அதிலிருக்கும் ரகசியங்களையும் கூட இன்னும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கப்பால் இன்றைய அரசியல் சூழலில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே கிடப்பில் கிடக்கின்றன.
அவற்றை எல்லாம் செய்யாமல் வெறுமனே அறிக்கை அரசியல் நடத்துவது உசிதமானதல்ல என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
(ஏ.எல்.நிப்றாஸ்)