எரிபொருள் விலை தொடர்பாக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விலை சூத்திரம் மக்களின் கவனத்திற்காக அடுத்த வாரம் வெளியிடப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. தற்போதைக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் இன்னும் மக்களிடம் பிரசித்தப்படுத்தவில்லை. எவ்வாறாயினும் விலை சூத்திரம் மக்களின் கவனத்திற்காக அடுத்த வாரம் வெளியிடப்படும். அத்துடன் பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் இதுவரை நடத்தப்படவில்லை. ஏற்கனவே அண்மையில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் இரண்டு வருடங்களுக்கு பஸ் கட்டண அதிகரிப்பினை கோர முடியாது. தனியார் பஸ் சங்கத்தினருடனான ஒப்பந்தத்திற்கு அமைய தற்போதைக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 102 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நட்டமாக அதனை கருத முடியாது. முன்னைய ஆட்சியின் போது விற்பனை செய்யப்பட்ட பெற்றோலின் விலையை நாம் இன்னும் மிஞ்சவில்லை. முன்னைய ஆட்சியை பார்க்கிலும் குறைவான விலைக்கே பெற்றோலை விற்கின்றோம். எனினும் உலக சந்தையில் பெற்றோலின் விலை குறையும் மக்களுக்கு அந்த சலுகையை வழங்குவோம். நாட்டில் மொத்தமாக 52 இலட்சம் குடும்பங்கள் வாழ்வதுடன் 72 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் 40 இலட்சம் மோட்டார் சைக்கிள்களும் 12 இலட்சம் முச்சக்கர வண்டிகளும் 8 இலட்சம் கார்களும் ஒரு இலட்சம் பஸ்களும் 4 இலட்சம் வேன்களும் 3 இலட்சத்து 75 ஆயிரம் வரையான லொறிகளும் உள்ளன. எமது அரசாங்கத்தின் பெற்றோல் விலை அதிகரிப்பினால் முன்னைய காலங்களை விட வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு இலாபம் உள்ளது.
தற்போது இலங்கை போக்குவரத்து சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இதன்படி முதற்தடவையாக 161 கோடி ரூபா இலாபம் அடைந்துள்ளது. புதிதாக ஊழியர்களை சேவையில் இணைப்பதனை நிறுத்தியதுடன் 4000 பேரை தன்னிச்சையாக ஓய்வு பெற செய்தோம்.
இதுவே இந்த இலாபத்திற்கு காரணமாகும். நாம் புதிதாக 500 பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளோம். 54 ஆசனங்களை கொண்ட பஸ்கள் நானூறும் 35 ஆசனங்களை கொண்ட பஸ்கள் 100 ம் இறக்குமதி செய்யவுள்ளோம். இதற்கு அப்பால் நவீன முறைமையிலான பஸ்களை ஹங்கேரியில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளோம். இதன்படி ஹய்பிரிட் வகை பஸ்கள் 750, மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் 250 ஐ இறக்குமதி செய்யவுள்ளோம். அடுத்த புத்தாண்டுக்கு முன்னர் குறித்த பஸ்கள் சேவைக்கு உட்படுத்தப்படும்.