குஜராத் முதல்வர் ஆனந்திபென்னை ராஜினாமா செய்யவைத்து அவரை பலியாடாக மாற்றியுள்ளது பாஜக. ஆனால் இந்த நடவடிக்கையால் குஜராத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற பாஜகவின் கனவு இனியும் நனவாகாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக நேற்று அறிவித்தார். அவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் முதல்வர் ஆனந்திபென்னை ராஜினாமா செய்யவைத்து அவரை பலியாடாக மாற்றியுள்ளது பாஜக.
ஆனால் இந்த நடவடிக்கையால் குஜராத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற பாஜகவின் கனவு இனியும் நனவாகாது.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கு ஆனந்தியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி காரணம் அல்ல மோடியின் கீழ் நடந்த 13 ஆண்டு ஆட்சி காலமே குஜராத் கொந்தளிப்புக்கு பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மாநிலத்தின் மேற்கு பகுதியில் அண்மையில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கை ஓங்கியது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
