மன்னார் நகர் நிருபர்
பாடசாலைக்கு உரிய காரணம் இன்றி சமூகம் அழிக்காத மாணவர்களை வீடு தேடி சென்று அழைத்து வரும் அதிபரின் செயற்பாடு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய பல கிராமங்கள் காணப்படுகின்றது. மக்கள் தொகை அதிகமாக காணப்பட்டாலும் அபிவிருத்தியிலும், கல்வித் தரத்திலும் குறித்த கிராமங்கள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
வறுமை காரணமாக அனேக குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. அனேகமானவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்திவிட்டு வேலைகளுக்கு சென்று குழந்தை தொழிலாளர்களாக பணி புரிகின்றனர்.
அவ்வாறான கிராமங்களில் சாந்திபுர கிராமமும் ஒன்றாகும். இங்கு பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய அனேக மாணவர்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டும், போதை பொருட்களுக்கும் அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் சாந்திபுரத்தில் காணப்படும் பாடசாலையில் மாணவர்களின் வரவும் தொடர்சியாக குறைவடைகின்றமையினாலும், மாணவர்கள் கல்வி இடைவிலகல் அதிகரிப்பதனாலும் இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்காக சாந்திபுர பாடசாலை அதிபர் தினமும் பாடசாலைக்கு வராத மாணவர்களை வீடு தேடி சென்று, தினமும் பாடசாலைக்கு அழைத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது மட்டும் இன்றி கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக மாலை நேர வகுப்புக்களையும் கற்று கொடுத்து வருகின்றார்.
இன்றைய தினம் பரீட்சைக்கு வருகை தராமல் இருந்த ஒரு மாணவனை நேரடியாக வீட்டுக்கு சென்று அழைத்து வந்து பரீட்சை எழுத வைத்த நிகழ்வானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்சியாக பின்தங்கிய நிலையில் காணப்படும் இவ் பாடசாலையை முன்னேற்றுவிக்க இவ் அதிபர் பல முயற்சிகள் எடுக்கின்ற போதும், சில மாணவர்களின் பெற்றோர்களால் தொடர்சியாக பலமுறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியும், தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
