பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

193
(டிலான்)
எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்பர். ஆனால் இன்றைய நவீன உலகில் எண்ணும் எழுத்தும் என்பதற்கு அப்பால் கணணியும் ஆங்கிலமும் அவசியம் என்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே எமது மாணவர்கள் நவீன உலகின் சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் கல்வியைத் தொடர வேண்டும். அத்துடன் கல்வியில் காட்டும் ஆர்வத்தைப் போன்று ஒழுக்க நிலைகளிலும் காண்பிக்க வேண்டும். கல்வியும் ஒழுக்கமும் குடிகொள்கின்ற ஒருவரால் மட்டும்தான் சமுதாயத்தில் தலைநிமிர்வுடன் வாழ முடியும்.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் ஐந்து மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள், எழுது கருவிகள் என்பவற்றை லண்டனில் வசிக்கும் வேலாயுதபிள்ளை இந்திரனின் நிதி உதவியின் மூலம் கொள்வனவு செய்து மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் இப்பாடசாலை அதிபர் த.சத்தியகீர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரனும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஆர்.திரவியராஜா, ஆசிரிய ஆலோசகர்களான க.சாந்தகுமார், திருமதி.தமயந்தி, அதிபர்களான செல்லையா பேரின்பராசா, ந.வரதராஜன், தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர்.வேல்முருகுவின் பாரியார் திருமதி.சீவரெத்தினம் வேல்முருகு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் பேசுகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை பறி கொடுத்த கிராமம் பாண்டிருப்பாகும். அம்பாறை மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய அமரர்.வேல்முருகு பிறந்த மண்ணில் இத்தகைய நிகழ்வை நடாத்தும் போது அன்னாரை நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன். இதே வேளை நான் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் அமரர்.வேல்முருகு ஞாபகார்த்தமாக சிறுவர் பூங்காவை அமைத்துக் கொடுத்துள்ளேன். காரணம் மக்களையும் மண்ணையும் நேசித்த மகானின் பணிகளை நாளைய சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான்.
கல்விக்கான முதலீடு உடனடியாக இலாபத்தைத் தருவதில்லை. அந்த முதலீடானது காலம் தாழ்த்தி இலாபத்தை அளிக்கும். இந்த இலாபத்தின் மூலம் பெறப்படும் செல்வம் அழிந்து விடாது. உயிர் வாழும். இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தமக்கு என்ன இடர்கள் ஏற்பட்டாலும் தமது பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துகின்றனர் என்பதற்கு அவர்களின் வருகை சான்றாகும். எனவே மாணவர்கள் தமது பெற்றோரினதும், அதிபர், ஆசிரியர் போன்றோரினதும் கனவை நனவாக்கி வாழ்வில் உயர வேண்டும் என்றார்.
SHARE