ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மஹிந்தவைப் பெற்றெடுத்த தாய். இந்த தாயை பாதயாத்திரையின் போது மஹிந்த ராஜபக்ஸ சீரழித்துவிட்டதாக நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரே மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியின் பெயரை அவமதித்து விட்டதாக குற்றம் சுமத்தினார்.
பாதயாத்திரையின் போது மஹிந்த தான் செய்த தவறுகளை மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும், அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு தற்போது “நான் எதும் செய்யவில்லை. எனக்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை” என்று மஹிந்த கூறுவது வினோதமானது எனவும் கூறினார்.
பாதயாத்திரையின் இறுதி நாளன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் கோஷங்கள் எழுப்பி, பட்டாசு கொழுத்தி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி, ஆடியும் பாடியும் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டனர்.
ஆனால் இது எதையும் மஹிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும் என குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச மற்றும் உதயகம்கன்பில போன்றோரை கட்சியில் இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடும் தீர்மானம் எப்பொழுதும் தமக்கு இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட பாதயாத்திரையில் சிறுவன் ஒருவன் இணைந்துக்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீர்ப்பாசன மற்றும் நீரகவளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்தார்.