பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

366
தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிரோஷா விமலரத்னவின் குழந்தையை குடும்ப உறவு முறை பெண்ணொருவரிடம் வழங்குமாறு உத்தரவிட்ட கெக்கிராவ நீதவான் புத்தினி அபேசிங்க, நிரோஷா மற்றும் அவரது கணவர் ருவான் லக்மால் அபேசிங்க ஆகியோரை தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

கணவனும் மனைவியும் இணைந்து தமது 10 மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை நடத்தியது.

எவ்வாறாயினும் குழந்தையை தாம் விற்பனை செய்ய முயற்சிக்கவில்லை எனவும் குழந்தையை பராமரிப்பதற்காக உறவு முறை பெண் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தாகவும் நிரோஷாவின் கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் இருவரும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான், குழந்தையை உறவு முறையான பெண்ணிடம் வழங்க நீதிமன்றத்தின் அனுமதியை வழங்கினார்.

நிரோஷா விமலரத்ன கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் நாக நாம்பு ஒன்றுடன் நடனமாடிய காரணத்தினால் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE