முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான 13 பேரும் துமிந்த சில்வாவும் நீதிமன்றிற்கு வருகைத் தந்துள்ளனர்.
பாரத லக்ஸ்மனின் மகளான ஹிருணிகா பிரேமசந்திரவும் நீதிமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.
பிரதிவாதிகள் விடுதலை..
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் பிரதிவாதிகளான 13 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மிகுதியாக உள்ள எட்டு பேரிடமும், முக்கிய சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
துமிந்தவுக்கு மரணதண்டனை…
2011ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் கொலை வழக்கிற்கு 5 வருடங்களுக்குப் பிறகு இன்று இறுதி தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு இன்று மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன.
ஆனால் துமிந்த சில்வா மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராக செயற்பட்டமையினால் இந்த வழக்கு விசாரணைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதோடு, பல இழுபறி நிலைகளும் காணப்பட்டன.
தற்போதைய நல்லாட்சியில் துமிந்தவின் வழக்கு துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டதோடு, பாரத லக்ஸ்மனின் படுகொலைக்கு உரிய தீர்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.