பாராளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும்-திருநங்கை

528

பாராளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும். அதற்கு, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று, தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் ராதா (50). திருநங்கையான இவர், தென்சென்னை லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு, ‘கணினி சுட்டி’ (கம்ப்யூட்டர் மவுஸ்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், அ.ம.மு.க. சார்பில் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில் திருநங்கை ராதா, “பாராளுமன்றத்தில் திருநங்கைகளின் குரலும் ஒலிக்க வேண்டும். அதற்கு, என்னை வெற்றிச் பெற செய்யுங்கள்” என்று, துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருநங்கை ராதா கூறியதாவது;

“பெரும்பாலான மக்கள் எங்களைப் போன்றவர்களை, ஆபாசமான பெயர்களை வைத்து அழைத்து வந்தனர். ஆனால், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி எங்களை ‘திருநங்கை’ என்று என்றைக்கு அழைத்தாரோ, அன்று முதல் எங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகள் தடம் பதித்து வருகின்றனர்.

அதுபோல், பாராளுமன்றத்திலும் திருநங்கைகள் இடம்பெற வேண்டும். அங்கே எங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். எம்.காம் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் என்னை அன்போடு வரவேற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 863 பேரில், ராதா மாத்திரமே திருநங்கை வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE