பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒருவர் கொலையானதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை காவல்துறையினர் குழப்பத்தில்

279

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒருவர் கொலையானதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை காவல்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் நண்பரை கொலை செய்து அனைவரையும் நம்ப வைத்துள்ளதாக எழுந்த புகார் காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பிணத்தை எடுத்து, டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பினர் போலீஸார்.

நெல்லை மாநகரையடுத்த, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைராஜ். கட்டுமான வேலைக்கு சென்று வந்த 27 வயது இளைஞரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை, பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன மாணவியும் அதனை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நெல்லையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் சுடலைராஜிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த சூழலில், கடந்த மே 8ம் தேதி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வயல்வெளியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலையானவர் அணிந்திருந்த உடை சுடலைராஜுடையது என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்தனர். அத்துடன் சட்டை பையில் இருந்த செல்போன், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை மூலமாகவும் கொல்லப்பட்டது சுடலைராஜ் என்பதை உறவினர்கள் உறுதி செய்தனர். இதனால் அந்த உடலை எடுத்துச் சென்று புதைத்தனர். பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் யாராவது, சுடலைராஜை மது குடிக்க அழைத்துச்சென்று கொலை செய்திருக்கக்கூடும் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஆனால், போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எதற்காக யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் விசாரித்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி, மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

சுடலைராஜின் கொலையில் உள்ள மர்மம் விலகாததால், கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுடலைராஜின் நண்பர்கள் சிலரிடம் விசாரித்தனர்.

அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்தது. உள்ளூரைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம், சில வாரங்களுக்கு முன்பு சுடலைராஜ தொடர்பு கொண்டு, ” நான் இபோது திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே என் மீதான வழக்கு எந்த நிலையில் இருக்கு? என்னோட பெற்றோரை போலீஸார் தொந்தரவு செய்யுறாங்களா…” என விசாரித்து உள்ளான்.

இந்த தகவல் கிடைத்ததும் அதிர்ந்துபோன தனிப்படை போலீஸார், உண்மையை கண்டுபிடிப்பதற்காக திருப்பூருக்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சுடலைராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். கொலையானதாக சொல்லப்படும் சுடலைராஜ் உயிருடன்தான் இருக்கிறானா? அவன் தற்போது எங்கு பதுங்கி உள்ளான் என்பது பற்றி நெல்லை மாநகர போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த பிரச்னையில் திடீர் திருப்பமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி அம்பிகா, கடந்த சில தினங்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் சிவகுமாரை காணவில்லை என்றும், திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அவரை நெல்லையை சேர்ந்த நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்து உள்ளதால் அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான நெல்லை மாநகர போலீஸாருக்கு, சுடலைராஜ் தனது நண்பரை அழைத்து வந்து கொலை செய்து விட்டு, ஆள்மாறாட்டம் செய்து தப்பிச் சென்று இருக்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்தனர்.

அதனால், நீதிமன்ற அனுமதியைப் பெற்று சுடலைராஜ் உடல் எனச் சொல்லப்பட்ட பிணத்தை புதைத்த இடத்தை தோண்டி, டி.என்,ஏ சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, நேற்று சுடலைராஜ் என நம்பி புதைக்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி சோதனை செய்தனர்.

டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பின்னரே இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது தெரிய வரும். இந்த விவகாரம் நெல்லை மற்றும் சுற்றுப்புற மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.dath.01dath

SHARE