திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரவிபாஞ்சான் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வளர்ப்புத் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
தம்பலகாமம் – பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் எம். திலகரட்ன (52 வயது), 31, 26 மற்றும் 21 வயது உடைய ஏனையவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி வீட்டில் இருக்கும் நேரத்தில் தனது வளர்ப்புத் தந்தை தன்னை ஒன்பது வயதிலிருந்தே துஷ்பிரயோகம் செய்ததாகவும், அத்துடன் வளர்ப்புத் தந்தையின் உறவினர்களும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் வாக்கு மூலத்தில் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வளர்ப்புத் தந்தை உட்பட மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் இன்றைய தினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.