பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையினை முழுமையாக வெளியிட சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு காத்திருப்பபதாக ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு.

161

பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைகளை முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்குக் காத்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணை அறிக்கையின் ஏனைய கோப்புக்களும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த நிலையிலேயே இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பாராளுமன்றத்துக்கு எழுத்துமூலம் பதிலொன்றை வழங்கியுள்ளார்.

சீ01 முதல் சீ 349 வரையான கோப்புக்கள் மற்றும் திறைசேரி முறி தொடர்பான ஏனைய ஆவணங்கள் இருந்தால் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளோம். சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் அதற்கமைய சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புக்களை காலதாமதமின்றி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கருத்துக்களை முன்வைப்பதை தவிர்க்குமாறும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதற்கமையவே கடந்த 5ஆம் திகதி சீ350 முதல் சீ360 வரையான கோப்புக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

SHARE