
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த வாரத்தில் அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் அருன வன்னியாரச்சியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆறு மணித்தியால விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வாரங்களில் இரண்டு இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்து விசாரணை நடாத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் நீதிமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2010ம்ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் கடத்தப்பட்ட எக்நெலிகொட கிரித்தலே முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரகீத் எக்நெலிகொடவை கடத்துமாறு யார் உத்தரவிட்டார்கள் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்புபட்டிருப்பதனால் மிகவும் நிதானத்துடன் நீதிமன்றின் உத்தரவுகளுக்கு அமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.