
வட கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற நிலையில் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களை கைக்குள் போட்டுக்கொள்வதன் ஊடாக மக்களிடம் உள்ள உரிமை மற்றும் சுயமரியாதை குறித்த வீரியத்தை குறைக்கும் ஒரு சதிவேலையாகவே கிராம இராஜ்யம் திட்டத்தை நாங்கள் பார்க்கிறோம் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்னேஸ்வரன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் உள்ள சகல கிராமங்களையும் நேரடியாக தமது கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக கிராமங்களில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கலாம் என்ற அடிப்படையில்,
கிராம இராஜ்ய திட்டம் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கருத்தை அறிந்து கூறுமாறு மாகாண பிரதம செயலாளருக்கு, பிரதமரின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று மாகாணசபையின் 41வது அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
விடயம் தொடர்பில் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த திட்டம் மாகாண சபைக்குள்ள அதிகாரங்களை புறக்கணித்து நேரடியாக பிரதமர் கிராம மட்டத்தில் உள்ள மக்களுடன் இணைந்து செயலாற்றும் வகையில் கிராம மட்டத்தில் குழுக்களை உருவாக்கி பின்னர்,
அந்தக் குழுக்களை கண்காணிக்க பிரதமரின் கீழ் இயங்கும் குழுக்களை உருவாக்கி கிராம மக்களுக்கு நன்மையளிக்கலாம் என்ற பெயரில் இந்த கிராம இராஜ்ய திட்டம் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால் கிராமங்கள் சார்ந்த அபிவிருத்தியாக இருக்கலாம் பிற விடயங்களாக இருக்கலாம். அனைத்தும் மாகாணசபைக் குரியவை. இந்த நிலையில் இந்த கிராம இராஜ்யம் திட்டம் தொடர்பில் எங்களோடு பேசாமல் எமது பிரதம செயலாளருக்கு பிரதமரின் செயலாளர் கடிதம் அனுப்பி எமது நிலைப்பாட்டை தெரிந்து கூறுமாறு கூறப்பட்டிருக்கின்றது.
இது எம்மை கடுமையான விசனத்திற்குள்ளாக்கியிருக்கின்றது. மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைத்து மத்திய அரசாங்கம் நேரடியாக கிராமங்களுக்குள் தலையீடு செய்வதன் ஊடாக, கிராமங்களின் மக்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களுக்கு அதிகளவு நிதியை கொடுத்து ஒரு வகையில் மாகாணசபையின் வலுவை சிதைப்பதுடன்,
கிராம மக்களிடம் இருக்கும் உரிமைசார்ந்த அல்லது சுயமரியாதை சார்ந்த வீரியத்தை குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே நாங்கள் இதனை பார்க்கவேண் டியிருக்கின்றது.
இந்த விடயம் மற்றய மாகாணங்களுக்கு பிரச்சினை இல்லை. என்றாலும் வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தமட்டில் இது பாரதூரமான விடயமாகும்.
மேலும் இந்த கிராம இராஜ்ய திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாஎமக்கு அதிகளவான தெரிவு படுத்தல்களை வழங்கியிருக்கின்றார்.
அதாவது அரசியல் யாப்பில் கிராமங்கள் சார்ந்த விடயம் மாகாணசபைக்குரிய விட யங்களாக முழுமையாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
எனவே கிராமங்களுக்குள் தாங்கள் நேரடியாக புகுந்து கொள்வதன் ஊடாக மிச்சம் சொச்சமாக வழங்கப்பட்டுள்ள மாகாணசபையையும் வலுவற்றதாக்கி எங்களிடம் பேரம் பேசுவதற்கு அல்லது எங்களை எதிர்காலத்தில் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளுவதற்கு மத்திய அரசாங்கம் தந்திரம் போட்டிருக்கின்றது.
எனவே இந்த விடயம் தொடர்பில் முழுமையான பதிலை பிரதமருக்கு அனுப்பிவைக்க நான் தயராகி வருகிறேன் என்றார்.