புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழுவினால் புதிய அரசமைப்புக்கான நகல் வடிவத்துக்குரிய யோசனைத் திட்டம் ஆங்கிலத்தில் தயாரித்து வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அதை அங்கீகரித்துள்ள வழிநடத்தல் குழு, அந்த யோசனைத் திட்டத்தின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புக்களை பரிசீலிப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது.
அன்று பெரும்பாலும் இந்த யோசனைத் திட்டத்தை அப்படியே அரசமைப்பு நகல் வடிவமாக ஏற்றுக்கொள்வதா என்பது குறித்தும், அப்படி ஏற்றுக்கொண்டால், அந்த நகலை அரசமைப்பு பேரவையாக நாடாளுமன்றைக் கூட்டி அதனிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி குறித்தும் தீர்மானிக்கப்படும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழிநடத்தல் குழுவின் கூட்டம் வரும் வியாழக்கிழமை கூட்டுவதாகவே முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.