வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை, ஓமந்தையில் அமைப்பதே சிறந்ததென கருத்துக்கணிப்பில் முடிவாகியுள்ள நிலையில், அதற்கான காணியை ஒதுக்கித் தருமாறு பிரதமர் ரணிலுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக இடம் தொடர்பான பிரச்சினை இழுபறியில் இருந்துவந்த நிலையில், அதற்கு கருத்துக்கணிப்பினூடாக தீர்வு காண்பதாக அண்மையில் கூட்டமைப்பினரால் நடத்தப்பட்ட சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் வடக்கு முதல்வர் காரியாலயத்தின் ஊடாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஓமந்தைக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஓமந்தையில் அமைந்துள்ள ‘சோலைக்காடு’ எனும் இடத்திலுள்ள 20.325 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான காணியை விடுவிக்குமாறும் பிரதமருக்கு வடக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தில் ஒரு சுபீட்சத்தை கொண்டுவருவதற்கு, குறித்த பொருளாதார மையம் பெரும் உதவியாக அமையுமென குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், மிகவும் குறுகிய காலப்பகுதியே எஞ்சியுள்ளதால், குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு பணிப்புரை விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.