வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஊகடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக மனுச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமரின் அரசியல் நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் மனுச நாணயக்கார, தி ஹிந்து எனப்படும் இந்திய செய்தித்தாள் ஒன்றில் வெளியானதாக போலிச் செய்தி ஒன்றை இலத்திரனியல் ஊடகமொன்றில் நடைபெற்ற விவாதமொன்றில் சமர்ப்பித்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரபல தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக அப்போதைய பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஈழத்தை ஒப்படைப்பதாக விஜயகலா மகேஸ்வரனுக்கு ரணில் அரசியல் ரீதியான உறுமொழி வழங்கினார் என ஹிந்து பத்திரிகையில் காணப்படுவதாக மனுச நாணயக்கார தெரிவித்ததுடன் அந்த பத்திரிகையின் நகல் பிரதியொன்றையும் தொலைக்காட்சியில் காண்பித்திருந்தார்.
ஜூலை 11ம் திகதி பிரசுரமான பத்திரிகையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவ்வாறான ஓர் செய்தி ஹிந்து பத்திரிகையில் வெளியாகவில்லை எனவும், அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஸவின் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
செய்தித்தாளில் வெளியானது போன்று போலியான செய்தி ஒன்றை உருவாக்கி அதனை காண்பித்து மக்களை பிழையாக வழிநடத்தியதாக மனுச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.