உலகின் அதி வயது கூடிய நபராக கருதப்பட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘சோடிமெச்டோ’ தனது 146 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவின், மத்திய ஜாவாவைச் சேர்ந்த அவர் 1870 ஆம் ஆண்டு பிறந்தவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை மோசமடைந்தமையை தொடர்ந்து கடந்த மாதம் 12 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆறு நாட்களின் பின் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென அவர் உறுதியாக இருந்தமையைத் தொடர்ந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
வீட்டுக்குத் திரும்பியநாள் முதல் அவர் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்ததாக அவரின் பேரன் தெரிவித்துள்ளார். பின்னர் சில நாட்களில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருமுறை அவரிடம் நேர்காணலொன்றை நடத்திய ஊடகமொன்று அவரின் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்னவென கேட்கவே, ‘பொறுமைதான்’ என அவர் பதிலளித்துள்ளார்.
தீவிர சிகரெட் பாவனையாளரான அவரின் 4 மனைவிகள் மற்றும் 10 சகோதர்கள் மற்றும் அனைத்து பிள்ளைகளும் முன்னரே காலமாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரில் உள்ளவர்களுக்கு பல வரலாற்று கதைகளைக் கூறி வந்த அவர் ஒரு பிரபலமாகவே திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் உடல், அவர் சில வருடங்களுக்கு முன்னர் வாங்கிய இடத்திலேயே புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.